பென்ஷன், பழைய ஓய்வூதிய திட்டம்? மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டபடி இன்று ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ-ஜியோ
சென்னை: மாவட்ட தலைநகரங்களில் காலை 11 மணிக்கு நிச்சயம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக தற்காலிக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க போவதாக அறிவித்திருக்கிறார்கள்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

அத்துடன், தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
அமைச்சர்கள் குழு நியமனம்
அதன்படி இன்றைய தினமும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ-ஜியோ ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் அதற்குள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, முடிவு எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் இடம்பெற்றுள்ளனர்.
4 வாரங்கள் கால அவகாசம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவினர் நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது அனைத்து கோரிக்கையையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கு அமைச்சர்கள் அரசுக்கு 4 வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் கோரியதுடன், போராட்டங்களை தள்ளிவைக்கவும் கேட்கப்பட்டது.
இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர். ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம், மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் சொன்னதாவது:
போராட்டம் நடத்த முடிவு
"முதலமைச்சருடன், அமைச்சர்கள், நிதித்துறை செயலாளர், முதன்மை செயலாளர் ஆகியோர் எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். இது சம்பந்தமாக 4 வார அவகாசம் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. போராட்டங்களை தள்ளிவைக்கவும் கேட்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் பேசி, இனிமேலும் கால அவகாசத்தை தர இயலாது என்ற அடிப்படையில், நாளை (இன்று) திட்டமிட்டபடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மறியல் - ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக தற்காலிக விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக காலை 11 மணிக்கு நடைபெறும் போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு முன்னதாக, அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளை அரசு நிராகரிக்கவில்லை. அவகாசம் கேட்டு இருக்கிறார்கள். இதனால், மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது. நிராகரித்து இருந்தால் போராட்டத்தை முன்னெடுத்து சென்றிருப்போம்.
ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு மீண்டும் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவெடுப்போம் அடுத்தகட்டமாக அரசுடனான பேச்சுவார்த்தைக்கும் தயாராக உள்ளோம். பட்ஜெட்டில் இதுதொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications