நகராட்சி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம்.. ஐகோர்ட் தீர்ப்பு யாருக்கு சாதகம்
சென்னை: 1991-ம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் நகராட்சியில் வேலை செய்துள்ளார்கள். அவர்கள் 2006ம் ஆண்டு தான் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்ட காலத்தில் பங்களிப்பு ஓய்வூதியம் தான் இருந்தது. இந்நிலையில் தினக்கூலிகளாக பணியில் சேர்ந்து பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட, தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என நகராட்சி ஊழியர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டன்ர். இதை ஏற்ற ஐகோர்ட், 4 மாதத்துக்குள் நகராட்சி ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை நகராட்சியில் 1991-ம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் ராமசுப்பு, ஆறுமுகம், ஸ்ரீதர், வள்ளியப்பன், ஸ்ரீதரன், நாகவள்ளி, திண்டுக்கல் நகராட்சியில் ரவிச்சந்திரன் ஆகியோர் பணியில் சேர்ந்தனர். பின்னர், இவர்களது பணி 2006-ம் ஆண்டு நிரந்தரம் செய்யப்பட்டது. இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டபோது, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது.

இதையடுத்து, தினக்கூலியாக வேலை செய்த நாட்களையும் கணக்கில் கொண்டு, தங்களது பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஹேமந்த் சந்த்ரகவுடர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வாதம்
அப்போது தமிழக அரசு தரப்பு, "பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இது அமலுக்கு வந்த பின்னரே மனுதாரர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டதால், அவர்களது பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க முடியாது" என்று வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பு வாதம்
மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரேம் நாராயண் ஆஜராகி, "இந்த உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், அகிலன் வழக்கில் அளித்த தீர்ப்பின்படி, மனுதாரர்கள் பெயர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க தகுதியானவர்கள்" என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர்கள் 2003-ம் ஆண்டுக்கு முன்பே பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்களாக இருந்தும், அவர்களை அரசு ஏதோ ஒரு காரணத்தால் நிரந்தரம் செய்யவில்லை."
நீதிமன்றம் தீர்ப்பு
மனுதாரர்கள் தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியுள்ளனர். இதுபோல 10 ஆண்டுகள் தற்காலிக பணி செய்தவர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. 1991-ம் ஆண்டு தினக்கூலியாக பணியில் சேர்ந்த மனுதாரர்கள், 10 ஆண்டுகள் பணி செய்தனர் என்ற தகுதியை 2001-ம் ஆண்டே பெற்றுள்ளனர். அதனால், அவர்களது பெயரை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கவேண்டும். ஓய்வுபெற்ற மனுதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதியத்தை கணக்கிட்டு 4 மாதங்களுக்குள் வழங்கவேண்டும்" என்று தீர்ப்பு அளித்தார்
தினக்கூலி ஊழியர்களுக்கு சாதகம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தினக்கூலிகளாகப் பணியில் சேர்ந்து, நீண்ட காலத்திற்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்பட்ட நகராட்சி ஊழியர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும் சாதகமாகவும் அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு முக்கியமாக 1991-ம் ஆண்டு தினக்கூலி அடிப்படையில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்குச் சாதகமானது. சட்டப்படி, 10 ஆண்டுகள் தற்காலிகப் பணி முடித்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட தகுதியானவர்கள். அந்த வகையில், இவர்கள் 2001-லேயே தகுதி பெற்றுவிட்டதால், அவர்களைப் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு வெற்றி
தமிழகத்தில் ஏப்ரல் 1, 2003 முதல் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது. அரசு தரப்பில், "இவர்கள் 2006-ல் தான் நிரந்தரம் செய்யப்பட்டார்கள், அதனால் இவர்களுக்குப் பழைய ஓய்வூதியம் கிடையாது" என வாதிடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதை ஏற்கவில்லை.
அவர்கள் 2003-க்கு முன்பே (அதாவது 2001-ல்) பணி நிரந்தரத்திற்குத் தகுதியானவர்கள். அரசு ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களை நிரந்தரம் செய்யத் தாமதப்படுத்தியது ஊழியர்களின் தவறல்ல. எனவே, அவர்களுக்குப் பழைய ஓய்வூதியமே வழங்கப்பட வேண்டும். இந்தத் தீர்ப்பு இதேபோன்ற நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான இதர நகராட்சி மற்றும் அரசுத் துறை தற்காலிக ஊழியர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும். 10 ஆண்டுகள் பணி முடித்தும் தாமதமாக நிரந்தரம் செய்யப்பட்டவர்கள், தங்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கக் கோரி முறையிட இது வழிவகுக்கும்.












Click it and Unblock the Notifications