மழை வெளுக்க போகுதாம்.. நவம்பர் மாத அரிசியை இப்போதே வாங்கலாம்.. வெளியான அறிவிப்பு
சென்னை: வடகிழக்கு பருவமழை நாளை தொடங்க உள்ளது. இதனால் அதிக மழை பெய்யலாம் என்பதால் அடுத்த மாதத்துக்கான (நவம்பர்) அரிசியை இந்த மாதமே (அக்டோபர்) ரேஷனில் பொதுமக்கள் பெற்று கொள்ளலாம் என்று உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமையுடன், சர்க்கரை, மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை அனைத்து நியாய விலை கடைகளின் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

கடைகளில் விற்பனை செய்யப்படும் விலையை ஒப்பிடும்போது ரேஷனில் வழங்கப்படும் பொருட்களின் விலை குறைவாக உள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் பல கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். ரேஷன்கார்டுதாரர்களுக்கு இந்த பொருட்கள் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.
இந்நிலையில் தான் அடுத்த மாதமான நவம்பருக்கான அரிசியை பொதுமக்கள் இந்த மாதமே சேர்த்து வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாளை தொடங்கும் வடகிழக்கு பருவமழை தான். பொதுவாக நம் மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும். சென்னை உள்பட மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளித்த சம்பவங்கள் கடந்த ஆண்டு நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதும் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தேவையான பணிகளை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தான் அடுத்த மாதத்துக்கான ரேஷன் அரிசியை இந்த மாதமே பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக உணவு மற்றும் உணவு பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம். இதனை கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயனடையும் வகையில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய நவம்பர் 2025 மாதத்திற்குரிய அரிசியை மட்டும் அக்டோபர் 2025 மாதத்திலேயே பெற்று கொள்ளலாம்.
அதாவது அக்டோபர் மாத ஒதுக்கீடான 12-35 கிலோ அரிசியை ஏற்கனவே பெற்றவர்களும் அக்டோபர் மாதம் அரிசி ஒதுக்கீட்டை இதுவரை பெற்றாதவர்களும் நவம்பர் மாத ஒதுக்கீடான 12- 35 கிலோ அரிசியை இம்மாதத்திலேய பெற்று கொள்ளலாம்.
நவம்பர் 2025 மாத அரிசியை அக்டோபர் 2025 மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பர் மாதத்தில் தங்களுக்குரிய அரிசியினை பெற்று கொள்ளலாம். இந்த வசதியினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications