“தமிழகத்தில் ரத்த ஆறு.. விஜய் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது” - எடப்பாடி கடும் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் பாலாறும் தேனாறும் ஓடும் என நினைத்து மக்கள் வாக்களித்தனர். ஆனால் இப்போது ரத்த ஆறு ஓடுவதை பார்த்து மக்கள் திகைத்து நிற்கின்றனர்!" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கடந்த 5 மாத காலமாக தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

People Expected Change But Now See Rivers of Blood EPS Slams TN Govt

அதிமுக பொதுச்செயளாலரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மைனாரிட்டி த.வெ.க அரசின் முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்த திரைப்படங்களில் வருவதுபோல கொலை வெறிக் காட்சிகள், வன்முறை வெறியாட்டங்கள் தற்போது தமிழகத்தின் வீதிகள்தோறும் நடந்தேறி வருகின்றன. சாலைகளில் மழை, வெள்ளம் ஓடுகிறதோ, இல்லையோ, இரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.

சென்னை வேளச்சேரியில் வடமாநிலத் தொழிலாளி கொலை, சேலம் ஓமலூரில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் வெட்டிக் கொலை, சேலம் கிச்சிப்பாளையத்தில் தனியாக வசித்த மூதாட்டி, நகைகளுக்காக வெட்டிக் கொலை, திருத்தணியில் திருட்டு பைக் விற்று வந்த பணத்தை பிரிப்பதில் தகறாறு ஏற்பட்டு கொலை, திண்டுக்கலில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை, திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிவிட்டு வெளியே வந்தவர் பட்டப் பகலில் படுகொலை, சென்னை எண்ணூரில் இரயில் நிலையத்தில் மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல், சென்னையில் தன்னுடைய மகள் மீது நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் முயற்சி குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை படுகொலை, என்று தினசரி செய்தித் தாள்களை படித்தாலோ, காட்சி ஊடகங்களைப் பார்த்தாலோ இப்படிப்பட்ட செய்திகள்தான் அதிகம் வருகின்றன; கண்ணில் படுகின்றன.

மயிலாடுதுறையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் கணவருடன் தனிமையில் இருந்த வீடியோக்களை கணவரே வெளியிட்டது குறித்தும்; மேலும் தன் கணவனுக்கு சுமார் 27 பெண்களுடன் தகாத உறவு இருந்தது குறித்தும் அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தால், அதை காவல்துறை ஏற்க மறுத்ததுடன், தன்னை மிரட்டியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையீடு செய்துள்ளார். இச்சம்பவம் அந்தப் பெண்ணுக்கு திருமணமான பதினைந்தே நாளில் நடந்திருக்கிறது என்பதுதான் கொடுமையின் உச்சம்.

நேற்று கூட தலைநகர் சென்னை, திருவொற்றியூரில் 6 வயது வடமாநில சிறுமியை இளைஞர்கள் சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வந்த செய்தி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. குதிரை பேர ஆட்சியில் சிங்கப் பெண்கள் படை என்பது ரீல்ஸ் என்பதையே தினமும் நடக்கும் பாலியல் குற்றங்கள் அம்பலப்படுத்துகின்றன.

வீட்டுக்கு வீடு விஜய் இருக்கிறார்; அண்ணனாக பாதுகாப்பு கொடுப்பேன் என்று டயலாக் பேசுவது மட்டும் போதாது. நிஜமாகவே நல்லாட்சி கொடுப்பதற்கு தெம்பும், திராணியும், வேலை வாங்கும் திறமையும் தேவை. இந்த லட்சணத்தில் தான், த.வெ.க. அரசின் முதலமைச்சர் விஜய் ஆட்சியில், கடந்த 5 மாதங்களாக சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன்பு புதிதாக ஒரு அரசு அமைந்தவுடன் ஆட்சி மாறிவிட்டது, பழைய காட்சிகள் நடைபெறாது என்று நினைத்த மக்கள் தலையில், நிர்வாகத் திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் இடியை இறக்கி இருக்கிறார்கள்.

அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. எந்த ஒரு சமூக விரோத செயல்களை சுட்டிக் காட்டினாலும், அவைகள் தனி மனித வக்கிரக் குணங்களின் அடிப்படையில் நடைபெறுகிறது என்று கூறி, பிரச்சனையின் தீவிரத்தை இந்த பொய்க்கால் குதிரை ஆட்சியாளர்கள் தட்டிக் கழிக்கப் பார்க்கிறார்கள். குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றம் செய்பவர்களை உடனடியாகப் பிடிப்பதற்கும் முயற்சி செய்யாமல், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு, அவர்கள் மீதே பழிபோடும் வேலையையும் ஒருசில அமைச்சர்கள் தொடர்ந்து செய்து வருவது கண்டனத்திற்குரியதாகும்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று நம்பி த.வெ.க-விற்கு வாக்களித்த மக்கள் தற்போது இரத்த ஆறு ஓடுவது கண்டு திகைத்துப் போய் நிற்கிறார்கள். சட்டம்-ஒழுங்கை காக்க முனைப்புடன் செயல்பட வேண்டிய அமைச்சர்களும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணி கட்சி எம்.பி-க்களும் விழாக்களில், முதலில் குத்து விளக்கு ஏற்றுவது யார் என்ற சண்டையில் ஈடுபட்டு வருவது, இந்த அரசின் அலங்கோலத்தைக் காட்டுகிறது.செய்திகளைப் படி

சட்டம்-ஒழுங்கு போலிசார், ஆளும் கட்சியினரின் குடுமிப்பிடிச் சண்டையை விலக்கிவிடுவதிலேயே பொழுதைக் கழிப்பது, தமிழக மக்களின் தலையெழுத்தாகப் போய்விட்டது. ஆடு, மாடுகளை வெட்டுவது போல், மனிதர்களை அலட்சியமாக நடுரோட்டில்வெட்டி வீசி, சாலைகளில் இரத்த ஆறு ஓடும் அவலமும், குற்றவாளிகள் ராஜநடை போட்டுச் செல்லும் அவலமும் தற்போதைய த.வெ.க. ஆட்சியில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

மக்களை தொடர்ந்து எப்படி ஏமாற்றலாம்; மைனாரிட்டி ஆட்சியை எப்படி தக்க வைக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்தும் முதலமைச்சர் விஜய், அவருடைய கையில்தான் தமிழகக் காவல்துறை இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. தமிழகத்தில் பணியாற்றும் காவலர்கள் தன் பாதுகாப்புக்காக மட்டுமே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை முதலமைச்சர் விஜய் கைவிட்டுவிட்டு, கொலை பாதகர்களின் கொடும்பிடியில் இருந்து அப்பாவி மக்களைக் காக்கவும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கையில் தமிழகக் காவல் துறையை முனைப்புடன் ஈடுபடுத்தவும் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+