களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னை மெரினா கடற்கரை சாலையில் குவியும் மக்கள்.. பலர் ஏமாற்றம்!
சென்னை: புத்தாண்டைக் கொண்டாட பொதுமக்கள், சென்னை மெரினா கடற்கரை சாலையில் குவிந்துள்ளனர். சென்னையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
புது வருடம் பிறப்பதையொட்டி, மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக இன்று சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்துள்ளனர். புத்தாண்டு பிறப்பதற்கு முந்தைய இரவு சென்னை மெரினா கடற்கரை எப்போதுமே கொண்டாட்டத்தில் திளைக்கும். ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்வார்கள்.

அந்தவகையில் இன்று மாலையில் ஏராளமான பொதுமக்கள் மெரினா கடற்கரையில் குவிந்திருந்தனர். 8 மணிக்கு மேல், மணற்பரப்பு பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி, 8 மணி வரை மணப் பரப்பில், கடல் பகுதிகளில் நின்ற மக்கள் போலீசாரால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
8 மணிக்குப் பிறகு, காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. போர் நினைவுச் சின்னம் தொடங்கி, கண்ணகி சிலை வரை போக்குவரத்து முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. மக்கள் பாதசாரிகளாக மெரினாவில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
எனினும், மெரினா கடற்கரை பகுதியில் புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடலாம் என நினைத்து குடும்பத்துடன் வந்த ஏராளமானோர், உள்ளே அனுமதிக்காததைக் கண்டு, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.
காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்தி நகா், சுங்குவாா் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சுவாமி சிவானந்தா சாலை ஆகிய சந்திப்புகளில் வாகனங்கள் நுழையாதவாறு தடுக்கப்பட்டுள்ள்ளது. லாயிட்ஸ் சாலை, பாரதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை அங்கேயே நிறுத்தி விட்டு, நடந்தே மெரினா கடற்கரை சாலைக்கு வந்து 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தயாராகி வருகின்றனர்.
சென்னை நகரில் பாதுகாப்புக்காக 18 ஆயிரம் போலீசார், ஆயிரத்து 500 ஊர்காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் இன்று இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 450 இடங்களில் வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பைக் ரேஸ், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக 6 ஆயிரத்து 841 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கண்டறிவதற்காக 20 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவேளை குடிபோதையில் யாரேனும் வாகனம் ஓட்டி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் சுதாகர் தெரிவித்தார். உயிரிழப்பு இல்லா புத்தாண்டு கொண்டாட்டம் என்பதே இலக்கு எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications