"கப்பு முக்கியம் பிகிலு" நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்.. பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது இதுதான்
சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என சூசகமாக அரசியல் குறித்து பேசியது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு அண்ணாமலை அளித்த பதிலை பார்க்கலாம்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் அக்டோபர் 19 ஆம் தேதி நடிகர் விஜயின் லியோ திரைப்படம் வெளியானது. விஜய் ரசிகர்கள் லியோவை கொண்டாடி வருகிறார்கள். கடந்த 12 நாட்கள் முடிவில் ரூ.540 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ‛லியோ' திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்து முடிந்தது. இந்த விழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக பேசப்படும் நிலையில், இவரது பேச்சு அதிகம் கவனிக்கப்பட்டது. விழாவில் பேசிய நடிகர் விஜய், "நான் ரெடி.. வரவா.. '' எனும் பாடல் மூலம் உரையை தொடங்கினார். ‛‛மக்கள் தான் மன்னர்கள், நான் உங்கள் தளபதி, நீங்கள் ஆணையிட்டால் நான் செய்யத்தயார். சினிமாவில் புரட்சி தலைவர், நடிகர் திலகம், உலக நாயகன், சூப்பர் ஸ்டார், தல என ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டம் உள்ளது.
இந்த பட்டம் என்பது அவர்களுக்கு தான் சொந்தம். வலைதளங்களில் ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள். நமக்கு அதிகம் வேலை உள்ளது. மக்கள் பிடித்தால் தட்டிக்கொடுப்பார்கள். பிடிக்க வில்லை என்றால் தட்டி விட்டு விடுவார்கள்'' என பேசினார். மேலும் மேடையில் தொகுப்பாளர்கள் நடிகர் விஜயிடம் கேள்விகள் கேட்டனர். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கேள்வி எழுப்பினர். இதற்கு முதலில் நடிகர் விஜய் முதலில் மழுப்பலாக பதிலளித்தார்.
அதன்பிறகு அவர் ரசிகர்களை பார்த்து , ‛‛கப்பு முக்கியம் பிகிலு.." அதனை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்'' எனக்கூறினார். விஜய் தனது அரசியல் வருகையையே இப்படி சூசகமாக குறிப்பிட்டு இருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம், விஜயின் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை கூறியதாவது:-

யார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன் என்று முதலிலேயே சொல்லியிருக்கிறேன். மக்களை மேம்படுத்துவதற்கு யார் வந்தாலும் வாங்க.. நான் இதைப் பண்ண போறேன்.. இந்த மாதிரி பண்ன போறேன் என்று மக்களுக்கு ஐடியாலஜி கொடுங்க... மக்கள் தேர்வு செய்யட்டும். யாருமே அரசியலுக்கு வருவதற்கு யாருமே தடையாக இருக்கக் கூடாது. ஜனநாயகத்தில் மக்களுக்கு சாய்ஸ் இருக்க வேண்டும். 3 கட்சி இருப்பதற்கு 6 கட்சி இருந்தால் இன்னும் பெட்டர்தான்..
மக்கள் தேர்வு செய்வாரக்ள். அதுவும் புதியவர்கள் அரசியலுக்கு வரும் போதுதான் சிஸ்டம் மாறும். பழையவர்களே 30 வருடம் 40 வருடம் இருக்கிறார்கள். அதனால்தான் நீரோடை போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். விஜய் உள்பட நிறைய புதியவர்கள் அரசியலுக்கு வரட்டும். அவர்கள் எல்லோரும் மாற்று அரசியலை முன்வைக்கட்டும். தமிழக மக்கள் யாரை முடிவு செய்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ளலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications