பிரபல தமிழக மருத்துவமனை டேட்டா ஹேக்.. இணையத்தில் உலா வரும் 1.5 லட்சம் நோயாளிகளின் தரவுகள்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் இருந்து சுமார் 1.5 லட்சம் நோயாளிகளின் தரவுகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நவீன உலகில் எல்லாமே டிஜிட்டல் மாயமாகிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை எல்லாம் ஆன்லைன் வழியாகவே நடக்கிறது. இதனால் பொதுமக்கள் குறித்துப் பல தரவுகள் ஆன்லைனில் தான் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இப்படி ஆன்லைன் வழியாகத் தரவுகளைச் சேமித்து வைக்கும் போது, அவை திருடப்படும் வாய்ப்புகளும் இருக்கிறது. ஹேக்கர்கள் இந்த தரவுகளைத் திருடி விற்று வருகின்றனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் முடக்கம்.. கிரிப்டோகரன்சியில் ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்கள்?

தமிழக மருத்துவமனை
உலகத்தில் ஏதோ ஒரு மூலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடந்து வந்த இந்தச் சம்பவம் இப்போது நம் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளது. ஸ்ரீ சரண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த 1.5 லட்சம் நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகளை சில ஹேக்கர்கள் திருடியுள்ளனர். மேலும், சைபர் கிரைம் தளங்கள் மற்றும் டெலிகிராம் மூலம் அந்த டேட்டாக்களை விற்பனை செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இந்த ஹேக்கிங்கை முதலில் CloudSEK என்ற அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

நோயாளிகள் தரவு
இந்த மருத்துவ மையத்திற்கும் இந்த ஹேக்கிங்கிற்கும் தொடர்பு இல்லை. மூன்றாம் தரப்பு நபரிடம் இருந்தே தரவுகள் திருடப்பட்டுள்ளது. கடந்த 2007 முதல் 2011 வரையிலான நோயாளிகளின் தரவுகளையும் இது உள்ளடக்கியது என்று சைபர் குற்றங்களைக் கண்காணிக்கும் CloudSEK அமைப்பு தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் இந்த தரவுகளை விற்பனை செய்து வருகின்றனர். தங்களிடம் நோயாளிகளின் டேட்டா இருப்பதைக் காட்டச் சிறு தரவுகளை அனைவரும் பார்க்கும் வகையில் பொதுவெளியிலும் ஹேக்கர்கள் பகிர்ந்துள்ளனர்.

என்ன டேட்டா
திருடப்பட்ட தரவுகளில் நோயாளிகளின் பெயர்கள், பிறந்த தேதிகள், முகவரி, பாதுகாவலரின் பெயர்கள் மற்றும் மருத்துவரின் விவரங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவர்களின் விவகாரங்களை வைத்தே எந்த மருத்துவமனையில் தரவுகள் திருடப்பட்டது என்பதை CloudSEK அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள மருத்துவர்களில் பெரும்பாலானோர் இன்னுமே ஸ்ரீ சரண் மருத்துவ மையத்தில் தான் பணியாற்றி வருகிறார்கள் என்றும் அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.

எப்படி நடந்தது
இந்த ஹேக்கிங் குறித்த உறுதி செய்யப்பட்ட உடனே சம்பந்தப்பட்ட நபர்களிடம் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டதாக CloudSEK தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொறியாளர் நோயல் வர்கீஸ் கூறுகையில், "இந்தச் சம்பவத்தை ஒரு சப்ளை செயின் தாக்குதல் என்று கூறலாம், ஏனெனில் மருத்துவமனைக்கு ஐடி சர்வீஸ் வழங்கும் நிறுவனத்தை இவர்கள் ஹேக் செய்துள்ளனர். அங்குக் கிடைத்த தரவுகளை வைத்து மீண்டும் மருத்துவமனை நோயாளிகள் தரவுகளை ஹேக் செய்து எடுத்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனைக்கு ஏற்கனவே கூறிவிட்டோம்" என்றார்.

விற்பனை
ஆன்லைன் ஹேக்கர்கள் நோயாளிகளின் தரவுகளை 100 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 8,100) விற்கப்படும் என விளம்பரப்படுத்தியுள்ளனர். அதாவது தரவுகளை ஒருவருக்கு மட்டுமின்றி பலருக்கும் விற்பனை செய்த தாயாராக உள்ளனர். அதேநேரம் ஒருவருக்கு மட்டும் தரவு வேண்டும் என்றால் 300 டாலருக்கு விற்க உள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.. சமீபத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் தரவுகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.