பிரதமர் மோடி பேசுவதற்கு ‘சரக்கு’ இல்லை- நேரு, காந்தி பெயர் விவகாரத்தில் பீட்டர் அல்போன்ஸ் பதிலடி!
நேரு, காந்தி பெயர் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பதில் தந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ்.
சென்னை: கணவருடைய பெயரை குடும்பப் பெயராக வைப்பதுதான் இந்திய கலாசாரம் என்று நேரு, காந்தி பெயர் விவகாரம் தொடர்பான பிரதமர் மோடியின் கருத்துக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு நேற்று பிரதமர் மோடி பதிலளித்தார். பிரதமர் மோடி தமது பதிலுரையில், நேருவின் பெயரை மத்திய அரசு குறிப்பிட மறந்தால் காங்கிரஸ் ஆதங்கப்படுகிறது. பண்டித ஜவஹர்லால் நேரு சிறந்த மனிதர். அப்படியானால் அவரது பெயரை ஏன் குடும்பப் பெயராக வைக்காமல் காந்தி பெயரை ஏன் வைத்திருக்கிறார்கள்? நேருவின் பெயரை பயன்படுத்த என்னதான் தயக்கம்? என கேள்வி எழுப்பினார்.
பிரதமர் மோடியின் இந்த கேள்வி பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவரும் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கணவருடைய பெயரைகுடும்பப் பெயராக வைப்பதுதான் இந்திய கலாச்சாரம் என்ற அடிப்படை புரிதல்கூட நமது பிரதமருக்கு இல்லையே! உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் பிரதமர் பாராளுமன்றத்தில் பேசும் பேச்சா இது? பேசுவதற்கு வேறு 'சரக்கு' இல்லை என்றால் தரம்தாழ்ந்து பேசுவதுதானே வழி. இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் பதிவிட்டுள்ளார்.
அதாவது இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் காந்தி. ஆகையால் இந்திரா அம்மையாரும் அவரது குடும்பத்தினரும் காந்தி என்ற பெயரை தங்களுடன் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதனையே பீட்டர் அல்போன்ஸும் தம்முடைய பதிவின் மூலமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.

பிரதமர் மோடியின் விமர்சனம் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகி இருக்கிறது. மூத்த பத்திரிகையாளர் Chandra Barathi தமது ட்விட்டர் பக்கத்தில், திருமதி. இந்திராவின் கணவரின் குடும்பப் பெயர் காந்தி. திருமணமான பெண்கள், அவர்களது குழந்தைகள் கணவரின் குடும்பப் பெயரால் அறியப்படுவது வழக்கம். பிரதமருக்கு மட்டும் தான் இதில் பிரச்சனை. இறந்து பல தசமங்களுக்குப் பிறகும் பாஜகவிற்கு நடுக்கம் கொடுக்கும் பெயர் நேரு என எழுதியுள்ளார். @PUSHPAR241982 என்ற நெட்டிசன், கடந்த 9 ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சீனா ஆக்கிரமிப்பு, அதானி மக்களின் வரிப்பணத்தை சுரண்டல் போன்ற எந்த பிரச்சனை வந்தாலும் நீங்கள் மறைவதற்கு தேவைப்படும் ஒரே பெயர் நேரு என காட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications