நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கத் திட்டம்? ரசிகர் மன்ற நிர்வாகிகளை மீண்டும் சந்திக்கும் நடிகர் விஜய்
சென்னை: 234 தொகுதிகளை சேர்ந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நாளை சந்தித்து பேசுகிறார் நடிகர் விஜய். இதன் மூலம் விஜயின் அரசியல் வருகை உறுதி என்பதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன.
அண்மையில் 234 தொகுதிகளில் இருந்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை சென்னைக்கு அழைத்து அவர்களை ஊக்கப்படுத்தி கலந்துரையாடினர். சுமார் 13 மணி நேரம் ஒரே இடத்தில் நின்றவாறு கொஞ்சம் கூட சலிப்பின்றி தன்னை பார்க்க வந்த மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.

அதோடு மட்டுமின்றி காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் அறுசுவை உணவு, தங்கும் வசதி, போக்குவரத்து ஏற்பாடு என சகலத்தையும் கவனித்துக் கொண்டார் நடிகர் விஜய். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதற்குள் இன்னொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவுள்ளார்.
234 தொகுதிகளில் இருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துள்ள நடிகர் விஜய், நாளைய தினம் அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார். மேலும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தனித்தனி புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். பனையூர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது அரசியல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ ரசிகர்களை நடிகர்கள் சந்திப்பது வழக்கம். ஆனால் நடிகர் விஜய் குறைந்த இடைவெளியில் அதிகமுறை தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார். இதற்கு முன்னர் நடந்த சந்திப்பில் சுடச்சுட மட்டன் பிரியாணி விருந்து வைத்திருந்தார். நாளைய தினமும் ரசிகர்களுக்கு அசைவ விருந்து அளிப்பார் எனத் தெரிகிறது.
இதனிடையே நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத சூழலிலும், அவரது ஒவ்வொரு நகர்வையும் அரசியல் கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாளைய தினம் தனது ரசிகர்கள் மத்தியில் விஜய் என்ன பேசுவாரோ என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடையே எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications