தனிக்கட்சியை தொடங்கும் அண்ணாமலை? நொடியும் யோசிக்காமல் அவர் கொடுத்த பதில்! ஆஹா நோட் பண்ணுங்க
சென்னை: தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் இருப்பதாகக் கடந்த சில காலமாகவே தகவல் வெளியாகி வருகிறது. மேலும், இதனால் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை புதிய கட்சியை ஆரம்பிக்கப் போவதாகவும் தகவல்கள் பரவின. இதற்கிடையே தமிழ்நாடு பாஜக மாஜி தலைவரான அண்ணாமலை, தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதாகப் பரவும் தகவல்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவின் முகமாக இருந்தவர் அண்ணாமலை. கடந்த தேர்தலுக்கு முன்பு அவர் நடத்திய வேல் யாத்திரை தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சிக்குப் பெரியளவில் உதவியது. அதன் பிறகும் கூட செய்தியாளர்கள் சந்திப்பு, பொதுக்கூட்டங்களில் அவர் நேரடியாகவே திமுக பற்றி அதிரடி கருத்துகளைக் கூறி வந்தார். தமிழகத்தில் பாஜக வளர இது பெரியளவில் உதவியது.

அதிருப்தியில் அண்ணாமலை?
இதற்கிடையே கடந்த சில காலமாகவே தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சில பாஜக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் மோதல் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால் அவர் சீக்கிரமே தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும் கூட தகவல்கள் பரவின. இதற்கிடையே அண்ணாமலையே இது தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார்.
பாஜக நிர்வாகியான நடிகை ராதிகாவின் தாயார் கீதா ராதா நேற்று முன்தினம் இரவு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தர். இதையடுத்து சென்னையில் உள்ள ராதிகா சரத்குமார் இல்லத்திற்குத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று, ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழக அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அண்ணாமலை விளக்கம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேற்றைய தினம் அண்ணாமலை சந்தித்துப் பேசியிருந்தார். அது தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை, "கடந்த 2024ம் ஆண்டு முதலே டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியில் இருந்து வருகிறார். சமீபத்தில் தான் அவர் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். அப்போதே அவரை சந்திக்க வேண்டும் என இருந்தேன். ஒரு மாதமாகவே சுற்று பயணத்தில் இருந்ததால் அவர் சந்திக்க முடியவில்லை.. இப்போது சென்னை வந்ததும் அவரை நேரில் சந்தித்தேன்.
திமுகவை வீழ்த்த மீண்டும் என்டிஏ கூட்டணிக்கு வர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுத்தேன். அவர் நவம்பரில் கூட்டணி தொடர்பான முடிவு எடுக்க போவதாகச் சொல்லி இருக்கிறார். நவம்பரில் அவர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறேன். டிடிவி தினகரனை தொடர்ந்து அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்திக்கப் போகிறேன். அவரையும் மீண்டும் கூட்டணிக்கு வர அழைப்பு விடுப்பேன்" என்றார்.
விஜய்க்கு சப்போர்ட்
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக விஜய்யின் விமர்சனம் குறித்த கேள்விக்கு அவர், "விஜய் கருத்தை வரவேற்கிறேன். துபாய் போன போதே திமுக குடும்ப ஆடிட்டரையும் உடன் அழைத்துப் போனார்கள். அதன் அடிப்படையிலேயே விஜய் குற்றஞ்சாட்டி இருக்கிறார். தாங்கள் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றால் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும்" என்றார்.
தனிக்கட்சி
அப்போது செய்தியாளர் ஒருவர் நீங்கள் தனிக்கட்சி ஆரம்பிக்க உள்ளீர்களா கேட்டார் அதற்கு நொடியும் யோசிக்காமல், "தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது சொல்கிறேன்"என்று அண்ணாமலை கூறிவிட்டுச் சென்றார். தனிக்கட்சி தொடர்பான கருத்துகளை அவர் மறுக்கவில்லை என்பதால் அண்ணாமலையின் இந்தப் பதில் அரசியல் அரங்கில் கவனம் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications