+2 மார்க் குறைவா வந்திருக்கா? மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி?
சென்னை: பிளஸ் 2 மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு மே 7ஆம் தேதி (நாளை) காலை 11 மணி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 7.72 லட்சம் மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று காலை 9.30 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன் வெளியிட்டார்.

பிளஸ் 2 தேர்வு எழுதிய 7.72 லட்சம் பேரில் 7,19,196 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,478 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் 3,25,305 பேர் தேர்வு எழுதினர். அது போல் 3,93,890 மாணவிகள் தேர்வு எழுதினர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதினார்.
இவர்களில் மாணவர்கள் 92.37 சதவீதமும் மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி அடைந்துவிட்டார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் மொத்தமாக 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், அதிக மதிப்பெண் வரும் என எதிர்பார்த்து, குறைவான மதிப்பெண்களே கிடைத்துள்ளதாக உணரும் மாணவர்கள், மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் ஆகியவற்றிற்கான தேதியை அரசு தேர்வுத் துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வர்கள் - விடைத்தாள் நகல் / மறுகூட்டல் விண்ணப்பிக்கும் முறை: விடைத்தாள் நகல் / மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 07.05.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் 11.05.2024 ( சனிக்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக மதிப்பெண் பட்டியலை 09.05.2024 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகியவற்றைப் பதிவுசெய்து, www.dge.tn.nic.in இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தனித் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏதாவது ஒன்று: விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவாக முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும். மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.
விடைத்தாளின் நகல் பெறுவதற்கான கட்டணம்: விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு 305 ரூபாயும், ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாயும் செலுத்த வேண்டும். தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் நகல் - இணையதளத்கில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை: விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications