பிரதமர் வேட்பாளர் பிரச்சனை.. சட்டென டோனை மாற்றிய மாணிக்கம் தாகூர்.. தவெக ஹேப்பி
சென்னை: காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐ, சிபிம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. கூட்டணி உருவான சில மாதங்களிலேயே விரிசல்கள் ஏற்பட தொடங்கியுள்ளது. பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தவெக, காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் வைத்தனர். இந்நிலையில் சடாரென மாணிக்கம் தாகூர் டோனை மாற்றி ட்விஸ்ட் கொடுத்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளை மட்டும் வைத்து தேர்தல் நடக்க போவதில்லை. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கும். அதை இந்தியா கூட்டணி எதிர்கொள்ளும். எவ்வளவு பெரிய விஷயத்தை செய்ய போகிறோம். நீங்கள் திருப்பி திருப்பி பேசியதையே பேசுகிறீர்கள். 2029 தேர்தல் என்பது 543 தொகுதிகளில் நடக்க போகிறதா அல்லது எட்டப்பர்களால் 843 தொகுதிகள் ஆகிறதா என்பது தான் கேள்வி.

எட்டப்பவர்கள் சதி
அதைப்பற்றி பேசி கொண்டிருக்கிறோம். நீங்கள் மீண்டும் மீண்டும் பிரதமர் வேட்பாளர் யார் யார் என்று கேட்டால் எப்படி. எட்டப்பர்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை. மோடியும், அமித்ஷாவும் எதிர்க்கட்சிகளை உடைத்து, மக்களிடம் அதிகாரத்தை பறிக்க என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கி சொல்லிவிட்டேன். நீங்கள் ஒரு மாநிலத்ததை பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் லைவாக பார்க்கிறார்கள். வாக்களித்த மக்கள் அனைத்தையும் கண்கூடாக பார்க்கிறார்கள்.
இது மிகப்பெரிய விஷயம். இதற்கு முன்பு வேண்டாதவற்றை கட் செய்துவிட்டு, வேண்டியதை மட்டும் காப்பி செய்து காட்டி கொண்டிருந்தனர். அந்த பழக்கத்தை தூக்கி எறிந்துள்ளனர். முன்னாடி 10 நாட்கள் நடக்கும் கூட்டத்தொடர், இப்போது முழுவதுமாக நடந்துள்ளது. இது முக்கியமானது. எதிர்க்கட்சிகள் அர்த்தமற்ற கேள்விகளை கேட்கிறார்கள் என்பதை மக்கள் பார்க்கிறார்கள். தெளிவாக உணர்த்துகிறது. ஆளுங்கட்சி அமைச்சர்களும் தங்கள் கொள்கைகளை பேசுவதை காண முடியாது.
நரித்தந்திரம்
இந்த ஜனநாயக நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். முதலமைச்சராக விஜய் இந்த முடிவை எடுப்பதை வரவற்கிறேன். தொடர்ந்து லைவ் கொடுப்பதும், மக்கள் அதை பார்ப்பதும், உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் செயல்பாடுகளில் முன்னேற்றம் வருவது தமிழக ஜனநாயகத்திற்கு முக்கியமானது. இதை வரவேற்க வேண்டுமே தவிர, கொச்சைப்படுத்த கூடாது. சபாநாயகர் நடுநிலையாக நடந்து கொள்கிறார்.
எதிர்க்கட்சிகளுக்கு சம வாய்ப்பு கொடுக்கிறார். இதை திசை திருப்பும் விதமாக வேறு பேசுவது நல்லதல்ல. ஒத்திவைப்பு தீர்மானம் கூட அறிமுகப்படுத்தப்படுகிறது. மேகதாது விஷயத்தில் எதிர்க்கட்சி தலைவர் சொன்ன பரிந்துரை கூட உள்வாங்கி திருத்தம் செய்தனர். இது நல்ல ஒரு தொடக்கம். முதலமைச்சர் விஜய் ஜனநாயக முறைப்படி சட்டமன்றத்தை நடத்துவது பாராட்டுக்குரியது. இந்த கூட்டணியை பிரிப்பதற்காக நரித்தனம் நடக்கிறது. அது நேற்றே முடிந்துவிட்டது" என்றார்.


Click it and Unblock the Notifications
