மலேசிய இந்திய காங். மாஜி தலைவர் டத்தோ சாமிவேலு காலமானார்- பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
கோலாலம்பூர்/ சென்னை: மலேசிய இந்திய காங்கிரஸின் நிறுவனத் தலைவராக 31 ஆண்டுகள் பதவி வகித்தவரும் மலேசிய முன்னாள் அமைச்சருமான டத்தோ எஸ். சாமிவேலு (வயது 86) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மலேசிய இந்தியர்களின்- தமிழர்களின் முகமாக திகழ்ந்தவர் டத்தோ எஸ்.சாமிவேலு. 1936-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி பிறந்தவர் சாமிவேலு.

மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியை 1979-ம் ஆண்டு தொடங்கினார் டத்தோ சாமிவேலு. 31 ஆண்டுகள், மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் பதவி வகித்தார் டத்தோ சாமிவேலு.
மலேசியாவின் சுங்கை சிபுட் தொகுதி எம்.பியாக 1974-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை பணியாற்றினார். மலேசியா அரசாங்கத்தில் 1983-1989; 1995-2008 வரை அமைச்சராகவும் பணியாற்றினார். கடந்த 2020-ம் ஆண்டு அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார் டத்தோ சாமிவேலு. இறுதி காலத்தில் டத்தோ சாமிவேலு குடும்ப பிரச்சனைகளால் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டார்.
இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக இன்று தூக்கத்திலேயே டத்தோ சாமிவேலு உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலாலம்பூர் இல்லத்தில் டத்தோ சாமிவேலுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது (முகவரி:No. 19, Lengkongan Vethavanam, Batu 3 1/2, Jalan Ipoh, 51100 Kuala Lumpur. அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
டத்தோ சாமிவேலுவின் மறைவுக்கு பிரதமர் மோடி தெரிவித்த இரங்கல்: மலேசியாவின் முன்னாள் கேபினெட் அமைச்சரும், மலேசியாவின் முதல் வெளிநாடு வாழ் இந்திய சம்மான் விருது பெற்றவருமான துன் டாக்டர் எஸ்.சாமி வேலுவின் மறைவுவால் மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி.

டத்தோ சாமிவேலுவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி: மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications