“நெதர்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் ஆனைமங்கலம் செப்பேடுகள்” - பிரதமர் மோடி பெருமிதம்
டெல்லி: நெதர்லாந்திலிருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ஆனைமங்கல செப்பேடுகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை அடுத்து, 'இந்த செப்பேடுகள் சோழர்களின் பெருமையை பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்" என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமையன்று நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக சோழர்கால ஆனைமங்கலம் செப்பேடுகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் சமூக வலைதள பதிவில், "இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம். 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் உடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்தில் லெய்டன் செப்பேடுகள் என்றும், இந்தியாவில் ஆனைமங்கலம் செப்பேடுகள் என்றும் அறியப்படும் இந்தப் பழங்கால செப்பேடுகளை மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசு 2012-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. சுமார் 30 கிலோகிராம் எடையுள்ள இந்த செப்பேடுகள், சோழப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச முத்திரையைக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான வெண்கல வளையத்தால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இதனை வரவேற்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நெதர்லாந்தின் லெய்டன் நகரில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, நமது பண்பாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வரலாற்றுப் பயணத்தில் மிகுந்த வரவேற்பிற்குரிய முன்னேற்றமாகும்.
இந்த அரிய செப்பேடுகள் வெறும் தொல்பொருள் சின்னங்கள் அல்ல; தமிழர்களின் மகத்தான வரலாறு, பண்பாடு மற்றும் சோழப் பேரரசின் மகோன்னதத்தைப் பதிவு செய்த நிரந்தரச் சான்றுகள்! மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது, இச்செப்பேடுகளை தமிழ்நாட்டிற்கு மீண்டும் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்ததுடன், ஒன்றிய அரசிடமும் தொடர்ந்து வலியுறுத்தினோம்.
அனைவரின் தொடர் முயற்சிகளும் இணைந்து இன்று இத்தகையைப் பலனை அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியப் பிரதமர் அவர்களது நெதர்லாந்து பயணத்தில் இந்தப் செப்பேடுகள் ஒப்படைக்கப்படும் நிகழ்வினை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். அதே வேளையில், இந்த ஆனைமங்கலம் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே ஆகும்!
அதனை உணர்ந்து ஒன்றிய அரசு இச்செப்பேடுகள் தமிழ்நாட்டிற்கே கொண்டுவரப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும். தமிழ்நாடு அரசும் உரிய வகையில் இதற்கான முயற்சிகளைத் தாமதமின்றி மேற்கொண்டு, இவ்வரிய வரலாற்று ஆவணங்கள் அதன் தாய்மண்ணான தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதை உறுதி செய்யவேண்டும். நமது பாரம்பரியச் செல்வங்கள், அவற்றின் வரலாற்றுடன் இணைந்துள்ள தமிழ்நாட்டு மக்களிடையே பாதுகாக்கப்பட்டு, மக்கள் அவற்றைக் காணும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோருகின்றேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications