தமிழ்நாடு வந்த மோடி.. மனுவை கொடுத்த தங்கம் தென்னரசு! நம்பிக்கை இருக்கு.. முதல்வர் சொன்ன வார்த்தை!
சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு அளித்துள்ள நிலையில், மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் கவனத்தை பெற்றது. இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக நேற்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் முருகன் மற்றும் பாஜகவினர் உள்ளிட்ட பலர் வரவேற்றனர்.
நேற்று தூத்துக்குடி புதிய விமான நிலைய முனையம், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு பெட்டகத்தை கையாளும் புதிய முனையம், சாலை, ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

தொடர்ந்து திருச்சி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த மனுவை முதல்வரின் ஒப்புதல்படி தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் மோடியிடம் வழங்கினார்.
அந்த மனுவில் சமர சிக்ஷா திட்டத்தின் கீழ் நிதி விடுவிப்பு, தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்கள், கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல், இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாப்பதற்கும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவாக விடுவிக்கவும் நிரந்தர தீர்வு காணுதல், சேலம் உருக்காலையின் மிகை நிலங்களை பாதுகாப்பு தொழிற் பூங்காவுக்கு வழங்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டு, இந்த மனுக்கள் பிரதமரிடம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என நம்புவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மதிப்பளித்து உரிய தீர்வினைப் பிரதமர் வழங்குவார் என்று நம்புகிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications