“அசாத்தியமான நடிப்புத் திறமை கொண்டவர்”.. டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
சென்னை: மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் டெல்லி கணேஷ் என்றும், தாம் ஏற்று நடித்த கதாபாத்திரங்களால் என்றென்றும் நினைவுகூரப்படுவார் டெல்லி கணேஷ் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
குணச்சித்திர நடிகராக சினிமா ரசிகர்கள் மனதில் நன்கு பதிந்தவர் நடிகர் டெல்லி கணேஷ். . வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று இரவு உயிரிழந்தார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரை உலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1976ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் படத்தின் மூலம், திரையுலகில் அறிமுகமானவர் டெல்லி கணேஷ். தொடர்ந்து, கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், குணச்சித்திரம், நகைச்சுவை உள்பட எல்லா கதாபாத்திரங்களிலும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியவர்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் டெல்லி கணேஷ். நடிப்பு மட்டுமின்றி, சிறந்த டப்பிங் கலைஞராகவும் திரைத்துறையில் பங்களித்தவர். 80கள், 90களில் மோகன்லால், சிரஞ்சீவி ஆகியோரின் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது அவர்களுக்கு டப்பிங் கொடுத்தவர் டெல்லி கணேஷ். சின்னத்திரை, இணைய தொடர்களிலும் நடித்துள்ள டெல்லி கணேஷ், நடிகராவதற்கு முன்பு 1964 முதல் 1974ஆம் ஆண்டு வரை, இந்திய விமானப்படையில் பணியாற்றியவர்.
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இரங்கல் செய்தியில் டெல்லி கணேஷின் நடிப்புத் திறனை வியந்துள்ளார் பிரதமர் மோடி.
“புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷ் அவர்களின் மறைவால் பெரிதும் வருத்தமடைந்தேன். அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர் அவர். தாம் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்துக்காகவும், தலைமுறைகள் கடந்தும் மக்களால் நினைவுகூரப்படுவார். நாடகத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications