குரு இடத்தில் பு.த.அருள்மொழி... வன்னியர் சங்கத்திற்கு புது தலைவர்
சென்னை: வன்னியர் சங்கத் தலைவராக பு.த.அருள்மொழியை நியமித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
வன்னியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த பு.த.அருள்மொழி, இப்போது அந்த சங்கத்திற்கு தலைவராக உயர்ந்துள்ளார். இதற்கான அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டார்.
வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ.குரு உடல்நலகுறைவால் காலமானதால், சுமார் ஓராண்டுக்கு பிறகு அந்தப் பதவி நிரப்பப்பட்டுள்ளது.

பாமகவின் பலம்
வன்னியர் சங்கத் தலைவராக ஜெ.குரு இருந்தவரை பாமக அசுர பலத்தோடு வட மாவட்டங்களில் கோலோச்சியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக பல தொகுதிகளில் திமுகவுக்கு டஃப் கொடுத்தது. இதற்கெல்லாம் வன்னியர் சங்க நிர்வாகிகள் தீவிர ஈடுபாட்டுடன் பாமகவிற்கு களப்பணியாற்றியதே காரணமாக இருந்தது.

நியமனம் இல்லை
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை எப்படியாவது முதலமைச்சராக்க வேண்டும் என குரு கடுமையாக களப்பணியாற்றியதை யாரும் மறுக்க இயலாது. பாமக கூட்டங்களுக்கு வன்னிய சங்க நிர்வாகிகள் மூலம் ஆட்களை திரட்டி அசர வைப்பார் அவர். இந்நிலையில் நோய்வாய்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெ.குரு திடீரென காலமானார். அதைத் தொடர்ந்து அவர் வகித்த வன்னியர் சங்கத் தலைவர் பதவி நிரப்பப்படாமல் ஓராண்டுக்கும் மேலாக காலியாகவே வைக்கப்பட்டிருந்தது.

ராமதாஸ் அறிவிப்பு
இதனிடையே வன்னிய சங்கத் தலைவராக பு.த.அருள்மொழியை நியமித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ராமதாஸ். அருள்மொழியை பொறுத்தவரை இப்போது வன்னியர் சங்கத்தின் முதன்மைச் செயலாளராக இருப்பவர். அவருக்கு தலைவர் பதவி அளித்து உயர்த்தியுள்ளார் ராமதாஸ்.

நம்பிக்கைக்குரியவர்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள புதுபூலான்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பு.த.அருள்மொழி. இவரது தம்பி பு.த.இளங்கோவன் பாமக வில் இருந்து விலகி அதிமுகவில் இருக்கிறார். தொடக்கக் காலம் முதலே பாமகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் அருள்மொழி, ராமதாஸின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்கிறார்.

ராமதாஸ் முடிவு
கடந்த சில மாதங்களாகவே வன்னியர் சங்கத்திற்கு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என நிர்வாகிகள் ராமதாஸிடம் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீர யோசித்து பு.த.அருள்மொழியை வன்னியர் சங்கத் தலைவராக நியமித்திருக்கிறார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications