வாழ்வே தொலைந்து விடும்... ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும் -ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை: ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசு இதைச் செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டால், ஆசிரியர் பணி கனவில் இருந்தவர்களின் வாழ்வே தொலைந்து விடக்கூடும் என ராமதாஸ் அச்சம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

லட்சக்கணக்கில்
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருந்தும், காலத்திற்கு ஒவ்வாத கட்டுப்பாடு காரணமாக, அப்பணியில் சேர முடியாத நிலைக்கு லட்சக்கணக்கான பட்டதாரிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். 42 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதியற்றவர்கள் என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டால், ஆசிரியர் பணி கனவில் இருந்தவர்களின் வாழ்வே தொலைந்து விடக்கூடும்.

சமூக அநீதி
தமிழ்நாடு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை ஆன்லைன் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதுநிலை பட்டதாரி ஆசிரிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது மகிழ்ச்சியானது என்றாலும் கூட, 42 வயதைக் கடந்த பட்டதாரிகள் இதில் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும்.

கடும் எதிர்ப்பு
தமிழ்நாட்டில் இதுவரை ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் 40 வயதைக் கடந்தவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியாது என்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதை அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அறிவிக்கை கடந்த மாதம் 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், அடுத்த இரு நாட்களில், அதாவது செப்டம்பர் 11-ஆம் தேதியே வயது வரம்பை தமிழக அரசு நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டேன்.

அரசு ஒதுங்கியது
ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு என்ற அநீதியை தமிழக அரசு நீக்கும் என்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகளும், கல்வியாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், தமிழகத்தின் அனைத்து அரசு பணிகளுக்குமான வயது வரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தி கடந்த மாதம் 16-ஆம் தேதி ஆணையிட்டதுடன் அரசு ஒதுங்கிக் கொண்டது. இது போதுமானதல்ல.

நியாயமல்ல
ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அதே ஆசிரியர் தேர்வு வாரியம் தான் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்களையும் தேர்ந்தெடுக்கிறது. ஆனால், விரிவுரையாளர் பணிக்கு எந்த வயது வரம்பும் நிர்ணயிக்கப்படாத நிலையில், அதற்கு முந்தைய நிலை பணியான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது.

உரிமை இல்லை
ஆண்டு தோறும் ஆசிரியர் நியமனம் செய்யாத அரசுக்கு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்க தார்மீக உரிமை இல்லை. இதில் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கடந்த ஆண்டு ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்தவர்களில் அவரும் ஒருவர். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தவர் அவர். அதனால், ஆசிரியர் பணிக்கு வயது வரம்பை அகற்ற வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்வார்.

ரத்து செய்க
தமிழ்நாட்டில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான கல்வித் தகுதியைப் பெற்றவர்களில் லட்சக்கணக்கானோர் 42 வயதைக் கடந்தவர்கள். அடுத்த ஆள்தேர்வில் ஆசிரியர்களாகி விடலாம் என்று கடந்த ஆண்டு வரை நம்பிக் கொண்டிருந்தவர்களின் கனவை ஒற்றை ஆணையில் கலைப்பது நியாயமல்ல. எனவே, லட்சக்கணக்கான பட்டதாரிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர் பணிக்கு வயது வரம்பு நிர்ணயித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications