அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்! 10ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை!
சென்னை: அன்புமணிக்கு எதிரான 16 குற்றச்சாட்டுகள் குறித்து அவர் வரும் 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று பாமக நிர்வாகக் குழு ஆலோசனையில் அன்புமணி பதில் அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சமாதானம் நடத்திய போதும் இருவருக்கும் இடையே எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸூக்கும் அன்புமணிக்கும் இடையே அதிகார மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 2026 வரை தலைவராக அன்புமணியை நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் புதுச்சேரி பட்டானூரில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது ராமதாஸ் மனதை புண்படுத்திய அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு தரப்பில் 16 குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
அன்புமணிக்கு நோட்டீஸ்
இதற்கு விளக்கம் தர அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அன்புமணி ராமதாஸ் தரப்பு பதில் அளிக்கவில்லை. மேலும் இதற்கு வழங்கப்பட்ட கெடுவும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு முடிவடைந்தது. இந்த நிலையில் பாமக நிர்வாகக் குழு இன்று கூடியது. ராமதாஸ் தலைமையில் இன்று குழுவினர் கூடி ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதிலளிக்க வரும் 10 ஆம் தேதி வரை காலக்கெடு அளிப்பதாக ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் பேட்டி
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "வரும் பத்தாம் தேதிக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அவருக்கு கால அவகாசம் வழங்கலாம் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என பதிலளிக்க வேண்டும். அன்புமணி பதில் அளிக்காவிட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.
அன்புமணிக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டுகள்
- பொதுக்கூட்டத்தில் மைக்கை தூக்கிப்போட்டு, ராமதாஸ் கருத்துக்கு எதிராக நடந்து கொண்டது; பனையூரில் தொண்டர்களை சந்திக்க தொலைபேசி எண்ணும் வழங்கியது.
- தைலாபுரத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட செயலாளர்கள் பங்கேற்காமல் தடுக்க முயன்றது
- சமூக ஊடகங்களில் ராமதாஸ் குறித்து அவதூறு, இழிவான தகவல்களை பரப்பியது.
- ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது.
- அனுமதியின்றி பொதுக்குழு கூட்டம் நடத்தி, அதில் ராமதாஸின் புகைப்படத்திற்கு துணி அணிவித்து "அவர் நல்ல புத்தி பெற வேண்டும்" என வேண்டியதாக குறிப்பிடப்பட்டது.
- "உரிமை மீட்க, தலைமை காக்க" என்ற நடைபயணத்தை ராமதாஸ் அனுமதி இல்லாமல் நடத்தியது.
- ராமதாஸை சந்திக்க விரும்புபவர்களை, பணமும் பதவியும் தருவதாகக் கூறி பனையூருக்கு அழைத்துச் சென்றது.
- "என் புகைப்படம் பயன்படுத்தக் கூடாது" என்ற ராமதாஸ் எச்சரிக்கையை மீறி, தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தது.
- மக்கள் தொலைக்காட்சி மற்றும் பசுமைத் தாயகம் என்ற அமைப்பை திட்டமிட்டு கைப்பற்றி, அதனை தனிநபர் சொத்தாக மாற்ற முயன்றார்.
- ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் சேர்த்து, அவர் சேர்த்தவர்களை நீக்கியது செல்லாது என தெரிவிக்கப்பட்டது.
- ராமதாஸிடம் பேசாமல் இருந்தபோதும், 40 முறை பேசியதாக பொதுவெளியில் கூறியுள்ளார்.
- ஜி.கே.மணி மருத்துவமனையில் இருக்கும்போது, கூட்டுப் பிரார்த்தனை குறித்து கேலி செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications