சூப்பர் ”வளர்ச்சி தொடர வேண்டும்” தமிழக அரசுக்கு அன்புமணி மனசார பாராட்டு.. விஷயம் இதுதான்!
சென்னை: தமிழக அரசின் வரி வருவாய் உயர்ந்திருப்பதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.
2022 ஏப்ரல் மாதம் முதல் முன் வரையிலான முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 2021ம் ஆண்டு முதல் காலாண்டில் ரூ.22,260 கோடியாக இருந்த வரி வருவாய், இந்த ஆண்டு ரூ.33,923 கோடியாக அதிகரித்தது. இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளதோடு, புதிய கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். தமிழக அரசின் வரி வருவாய் உயர்ந்தது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், 2022-23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழக அரசின் சொந்த வரிவருவாய் 52.30 சதவிகிதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அன்புமணி ட்வீட்
கொரோனா பாதிப்புகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீளத்தொடங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இந்த வளர்ச்சி தொடரவேண்டும். அதே நேரத்தில் மது உற்பத்தி மீதான கலால் வரி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.1,199.23 கோடியிலிருந்து ரூ.2,594.55 கோடியாக 116.30 சதவீதம் அதிகரித்திருக்கிறது. மாநில அரசின் விற்பனை வரி வருவாய் சுமார் ரூ.4 ஆயிரம் கோடியாக அதாவது 38.30 சதவவிகிதம் அதிகரித்திருப்பதற்கும் மது வணிகம் அதிகரித்திருப்பது தான் காரணம்.

அன்புமணி வேதனை
ஒரு காலாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.11,662.68 கோடி அதிகரித்துள்ள நிலையில், அதில் கிட்டத்தட்ட பாதியளவு வருவாய் உயர்வு மது வணிகம் அதிகரித்திருப்பதன் மூலமாக மட்டுமே கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கவில்லை. மாறாக, வருத்தமும், வேதனையும் மட்டுமே அளிக்கிறது.

இது பெருமையல்ல
ஒரு மாநிலத்தின் மது வருவாய் அதிகரிக்கிறது என்றால், குடும்பங்கள் சீரழிவதும், விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும், இளம் கைம்பெண்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகத் தான் பொருள் ஆகும். இது ஒரு மாநில அரசுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது.

மது விலக்கு
மது இல்லாத மாநிலம் தான் மகிழ்ச்சியான மாநிலம். மது மூலம் கிடைக்கும் வருவாயை வேறு ஆதாரங்கள் மூலம் திரட்ட முடியும். எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவோ, படிப்படியாகவோ மது விலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications