முடிவு எடுத்துட்டாரு! உரிமை மீட்கும் அன்புமணியின் பயணம்.. அழைப்பிதழிலேயே ராமதாஸுக்கு பதிலடி
சென்னை: ஜூலை 25ஆம் தேதி முதல் பாமக தலைவர் அன்புமணி தமிழ்நாடு முழுவதும் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள உள்ளதற்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் பாமக நிறுவனர் ராமதாஸ் படமில்லாமல், அன்புமணியின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் வரை பாமகவுக்கு நானே தலைவர் என்று ராமதாஸ் நேற்று முன் தினம் கூறி இருந்தார். தேர்தலுக்கு பின் எல்லாமே அன்புமணிக்கு தான் என்றும் வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வரும் என்று பார்க்கப்பட்டது.

பிபி எகிறுகிறது
ஆனால் நேற்று ராமதாஸ் பேசுகையில், என் கடைசி மூச்சு வரை நானே பாமக தலைவர்.. அன்புமணிக்கு பதவியை கொடுக்க மாட்டேன். அன்புமணியை நினைத்தால் பிபி எகிறுகிறது.. அன்புமணிக்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பு இல்லை. ராமரை போல் வனவாசம் செல்ல சொல்லவில்லை. செயல் தலைவராக இருக்க வேண்டும் என்றே சொல்கிறேன் என்று கடுமையாக விமர்சித்தார்.
அன்புமணி கொடுத்த அதிர்ச்சி
இந்தப் பக்கம் ராமதாஸ் பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் போதே, அன்புமணி ராமதாஸ் இன்னொரு பக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உரிமை மீட்பு பயணம் செல்ல உள்ளதாக அன்புமணி அறிவித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமதாஸ் படமின்றி அழைப்பிதழ்
அதன் முதற்கட்டமாக பாமக பலமாக இருக்கும் விழுப்புரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் அன்புமணி பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கான அழைப்பிதழ் பாமக சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் அன்புமணி மட்டும் கருப்பு கண்ணாடியுடன் இருக்கிறார்.
அன்புமணி பதிலடி
ஆனால் பாமகவின் நிறுவனர் ராமதாஸ் புகைப்படம் அழைப்பிதழில் இல்லை. இதுவரை பாமகவின் அழைப்பிதழில் ராமதாஸ் புகைப்படம் இல்லாமல் இருந்ததே கிடையாது. ஆனால் ராமதாஸ் - அன்புமணி இடையிலான மோதல் காரணமாக, வேண்டுமென்றே ராமதாஸ் புகைப்படத்தை அன்புமணி புறக்கணித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
அன்புமணி எடுத்த முடிவு
இதனால் பாமக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலமாக பாமகவை கையில் எடுக்கும் முடிவில் அன்புமணி தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளை அன்புமணி மேற்கொண்டு நிர்வாகிகளையும் சந்தித்து வருவதாக பார்க்கப்படுகிறது. இந்த மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாகவும் அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications