அன்புமணி - ராமதாஸ் பஞ்சாயத்துக்கு மத்தியில்.. திமுக கூட்டணி கட்சிகளுக்கே டஃப் கொடுத்த ஜிகே மணி!
சென்னை: தேர்தல் கூட்டணி தொடர்பாகவே ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், சட்டசபையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து திமுகவினருக்கே டஃப் கொடுத்துள்ளார் பாமக கௌரவ தலைவர் ஜிகே மணி.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினர்.

ஜிகே மணி பேச்சு
அப்போது பேசிய பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி, "தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்றும்; ஏழைகள் பங்காளன் என்றும் போற்றப்படுகின்ற கர்மவீரர் காமராஜருக்கு அவர் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கின்றது. தந்தை பெரியார் பெயரிலே பல்கலைக்கழகம் இருந்துகொண்டு இருக்கின்றது. நம்முடைய முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரில் மருத்துவப் பல்கலைக்கழகம் இருந்துகொண்டு இருக்கின்றது. அதேபோல, ஜெயலலிதா பெயரில் மீன் வளப் பல்கலைக்கழகம் இருந்துகொண்டு இருக்கின்றது.
இந்திய அளவில் எடுத்துக்கொண்டாலும் கூட, நேரு பல்கலைக்கழகம், அன்னை இந்திரா காந்தி பல்கலைக்கழகம் என்றும் மத்திய அரசில் இருந்துகொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் தான், எல்லோருக்கும் பல்கலைக்கழகம் பெயரில் இருக்கும் காரணத்தால், ஏன் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு, அவரது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது என்ற அடிப்படையில் தான், இங்கே நானும் சில நண்பர்களும் விதி 55-ன் கீழே கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் கோரி கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொடுத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
முத்தமிழறிஞர் பட்டம் சொன்னதே நான்தான்
மேலும் பேசிய ஜி.கே.மணி, "அரசியல் ரீதியாக திமுகவும் பாமகவும் முரண்பட்ட கட்சிகளாக இருந்தாலும் எங்கள் ராமதாஸ் அய்யா கலைஞர் மீது அளவிட முடியாத மரியாதை கொண்டவர். திமுகவினர் தலைவர் டாக்டர் கலைஞர் என்றுதான் சொல்வார்கள். நான் தான் கலைஞரிடம் சென்று, உங்களை முத்தமிழறிஞர் என்று சொல்லலாமே என்று கூறினேன். அதனை கலைஞர் ஏற்றுக்கொண்டார்." எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டசபையிலேயே அறிவித்தார்.
அன்புமணி - ராமதாஸ் மோதல்
பாமகவில் அதன் நிறுவனர் ராமதாஸ் - பாமக தலைவர் அன்புமணி இடையே பனிப்போர் நிலவி வருகிறது. பாமக தலைவர் பதவியை விட்டு அன்புமணியை நீக்குவதாகவும், தானே தலைவர் பதவியில் இருப்பேன் என்றும் அண்மையில் அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார் ராமதாஸ். அதே நேரத்தில் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் தான் தலைவர் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார். பாமகவில் ஏற்பட்ட இந்த மோதலுக்கு, கூட்டணி தொடர்பான நிலைப்பாடே காரணம் எனப் பேச்சுகள் எழுந்தன.
அதிமுக பாஜக கூட்டணியில் பாமக இணையக்கூடாது என ஜிகே மணி நினைப்பதாகவும் அதன் காரணமாகவே தந்தை மகன் இடையே பிரச்சனையை மூட்டி விட்டுள்ளார் எனவும் பாமகவினர் பலரே குற்றம்சாட்டுகின்றனர். இந்தச் சூழலில் தான் இன்று சட்டசபையில் திமுக கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியை புகழ்ந்து பேசியதோடு, அவர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கவும் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசியுள்ளார் ஜிகே மணி.












Click it and Unblock the Notifications