ஓஹோ.. கதை அப்படி போகுதா! 'அறிவாலயம்' பக்கம் ஒதுங்கும் 'தைலாபுரம்'.. ராமதாஸ் போடும் கூட்டணி கணக்கு!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையேயான மோதலுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட்டணி கணக்கு தான் முக்கியம் என்கின்றனர் ராமதாஸ் ஆதரவாளர்கள். திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராமதாஸ் பிடிவாதமாக இருக்க, தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என அன்புமணி கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் ஜிகே மணி உள்ளிட்ட சிலரும் திமுகவுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டும் என சொல்கிறார்களாம்..
தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் தற்போது மிகுந்த குழப்பத்தில் இருக்கின்றன. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் பக்கம் இருப்பதா? தலைவரான அன்புமணி பக்கம் நிற்பதா? என்ற குழப்பத்தில் காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.
மருத்துவரான அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு அழைத்து வந்த ராமதாஸ், அவரை எம்பி, மத்திய அமைச்சர் என அரசு பதவிகளில் அமர்த்தியதோடு, கட்சியின் தலைவராகவும் நியமித்தார். அன்புமணி தான் கட்சியின் எதிர்காலம் என்பதை உணர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு கட்ட நிர்வாகிகளும் அன்புமணி பின்னால் திரண்டனர்.

பாமக மோதல்
ஒரு கட்டத்தில் அதுவே ராமதாஸுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தான் உருவாக்கிய கட்சி. நான்தான் கட்சி என பேசி வந்த ராமதாஸ் 2026 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என விரும்பினார். ஆனால் 2021 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்ததால்தான் கணிசமான தொகுதிகளை, வாக்குகளை பெற முடிந்தது என்பது அன்புமணியின் எண்ணம். இந்த நிலையில் வன்னியர் சங்க மாநாட்டுக்கு ஏற்பாடுகள் நடந்த போது திமுக தரப்பை குஷிப்படுத்துவது போல பேசலாம் என நினைத்திருந்தார் ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸ்
ஆனால் அன்புமணியோ இட ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை கோடிட்டு காட்டி, திமுகவால் நமக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. அதிமுக தான் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தந்தது. மேலும் தற்போதைய கூட்டணி குறித்து முடிவெடுக்க தேவையில்லை. எதுவாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என சொன்னதாக சொல்லப்படுகிறது. தனது பேச்சை மகன் கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் தான் ராமதாஸ் அவரை செயல் தலைவராக பதவி இறகம் செய்தார்.
ராமதாஸ்
ஆனால் கட்சியில் நான் தான் தலைவர், உறுப்பினர்கள் நிர்வாகிகளை நீக்கும், நியமிக்கும் அதிகாரம் தனக்கு தான் இருக்கிறது எனக் கூறிய அன்புமணி, தற்போது பொதுக்குழுவும் நடத்தி முடித்து இருக்கிறார். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்திருக்கிறார் ராமதாஸ். ஆனால் அது செல்லாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜிகே மணி
இந்த நிலையில் திமுகவுடன் நெருக்கமாக இருக்கும் ஜிகே மணி தான் பிரச்சனைக்கு காரணம். பாமகவை திமுக கூட்டணிக்கு அழைத்து வரும் அசைன்மென்ட் அக்கட்சியில் இருக்கும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர்களுக்கும் தரப்பட்டு இருக்கும் நிலையில், ஜிகே மணி மூலம் அவர்கள் ராமதாசை அணுகி இருக்கின்றனர். ஆனால் தற்போதைய கூட்டணிக்கு சென்றால் மிகக் குறைந்த சீட்டுகள் தான் கிடைக்கும் எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என அன்புமணி பிடிவாதமாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே ஜிகே மணி உள்ளிட்டோர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.












Click it and Unblock the Notifications