அய்யாவுக்கு கடைசி சான்ஸ்.. ’மாம்பழம்’ கேட்டு அடம் பிடிக்கும் ராமதாஸ்! இன்று கோர்ட்டில் விசாரணை!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் நீண்ட காலமாக நீடித்து வரும் தந்தை-மகன் மோதல் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், இருவரும் 2026சட்டமன்ற தேர்தலில் தனி தனியாக களம் காண்கின்றனர். இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் 'மாம்பழம்' சின்னம், கொடி மற்றும் பெயரை பயன்படுத்தும் உரிமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு, கட்சியின் சின்னம், கொடி மற்றும் பெயரை தனது மகன் அன்புமணி ராமதாஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் நகலை எதிர் தரப்புக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. பாம கட்சியில் கடந்த சில மாதங்களாகவே கட்சி தலைமை பதவிக்காக கடும் மோதல் நிலவி வருகிறது.
தாம் தான் கட்சியின் உண்மையான தலைமை என்றும், கட்சியின் 'மாம்பழம்' சின்னம், கொடி மற்றும் பெயர் மீது முழு உரிமை தனக்கே இருப்பதாக டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் கட்சிக்குள் அதிகாரப்போர் வெளிப்படையாக உருவானது. மறுபக்கம், கட்சியின் தற்போதைய தலைவர் தாமே என்றும், 2026ஆம் ஆண்டு வரை கட்சி தலைவராக பணியாற்ற தேர்தல் ஆணையம் தங்களை அங்கீகரித்துள்ளதாக அன்புமணி தரப்பு வலியுறுத்தி வருகிறது.
இதனால் கட்சியின் அதிகாரம் யாருக்கு என்பது குறித்து இரு தரப்புகளும் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரம் நீதிமன்றங்களிலும் பல கட்டங்களாக சென்றுள்ளது. முதலில், மாம்பழம் சின்னம், கட்சி பெயர் மற்றும் கொடி போன்றவற்றை அன்புமணி தரப்பு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கில் தன்னை மனுதாரராக சேர்க்கவில்லை என்று கூறி, கட்சியின் பொதுச்செயலாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்தபோது, டாக்டர் ராமதாஸ் தொடர்ந்திருந்த வழக்கிற்கு இடைக்கால தடை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கு மேலும் சிக்கலான நிலைக்கு சென்றது. இந்த உத்தரவை எதிர்த்து டாக்டர் ராமதாஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகியது. அங்கு நடைபெற்ற விசாரணையில், உயர்நீதிமன்ற உத்தரவில் தவறு எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
அதே நேரத்தில், மாம்பழம் சின்ன உரிமை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், அந்த மனு தாக்கல் செய்யப்பட்டவுடன் மூன்று நாட்களுக்குள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையிலேயே தற்போது டாக்டர் ராமதாஸ் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி தர்மபிரபு, மனுவின் நகலை அன்புமணி தரப்புக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.


Click it and Unblock the Notifications
