சேலத்தில் நாளை அன்புமணி கூட்டம்.. பாமக எம்எல்ஏ அருளுக்கு திடீர் நெஞ்சு வலி.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: பாமகவின் முக்கிய நிர்வாகியான எம்எல்ஏ அருளுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம் வந்த பாமக எல்எல்ஏ அருள், திடீரென நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்தார். இதன்பின் அவரின் உதவியாளர்கள் உடனடியாக தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் தொடர்ந்து வருகிறது. அன்புமணி மீதும், அவரின் மனைவி செளமியா மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன் வைத்து வருகிறார். தனது மூச்சு அடங்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவியை அளிக்க மாட்டேன் என்று ராமதாஸ் அறிவித்து இருக்கிறார்.

இன்னொரு பக்கம் அன்புமணியும் அழைப்பிதழில் ராமதாஸ் புகைப்படத்தை புறக்கணித்து, ராமதாஸ் ஆதரவாளரான அன்பழகனை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி காட்டினார். இதன்பின் திடீரென, என்னை மன்னித்துவிடுங்கள்.. என்ன தவறு செய்தேன்.. நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
இருந்தாலும் அன்புமணியின் மன்னிப்புக்கு ராமதாஸ் பக்கம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. ராமதாஸ் வழக்கம் போல் பாமக நிர்வாகிகளுடன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாமக கவுரவத் தலைவர் ஜிகே மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள் மொழி மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே பாமகவில் சுமூக உடன்பாடு ஏற்படாத நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் ராமதாஸ் பக்கம் இருப்பதாக அறிவித்தார். ராமதாஸ் தலைமையில் இருப்பதே பாமக, மற்ற கூட்டங்கள் பற்றி தெரியாது என்றும் வெளிப்படையாக கூறினார். இந்த நிலையில் பாமக எல்எல்ஏ அருள் சபாநாயகரை சந்திப்பதற்காக தலைமைச் செயலகம் வந்தார்.
அப்போது திடீரென அருளுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக தலைமைச் செயலகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருளுக்கு முதலுதவி செய்யப்பட்டது. இதன்பின் ஓமந்தூரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்தில் நாளை அன்புமணி தலைமையில் பாமக கூட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் பாமக நிர்வாகிகள் மற்றும் அன்புமணி ஆதரவாளர்கள் மத்தியில் புதிய விவாதம் தொடங்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications