கொத்தாய் மாம்பழத்தை தூக்கிய அன்புமணி.. தொக்காய் சிக்கிய ராமதாஸ்! அடுத்தகட்ட ஆக்ஷனுக்கு ரெடியான பாமக
சென்னை: மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது அன்புமணி ராமதாஸ் தரப்பு. பல மாதங்களாகவே அன்புமணி தான் தலைவர், பாமக சின்னம், கொடி, பெயர் ஆகியவை தங்களுக்குத்தான் சொந்தம் என கூறிவந்த நிலையில் நாங்கள் தான் பாமக என ராமதாஸ் தரப்பு கூறி வந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தால் ராமதாஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில் பாமக தலைவராக ராமதாஸ் கூட்டணி பேச்சு வார்த்தைகளை கிட்டத்தட்ட இறுதி செய்து விட்டதாக கூறுகின்றனர். அதிமுக -பாஜக கூட்டணியில் 25 தொகுதிகள் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்ற அளவில் பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு வழியாக பாமகவில் நடந்து வந்த உட்கட்சி மோதல்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. பாமகவை தோற்றுவித்த ராமதாஸ் கட்சியின் எதிர்காலம் கருதி தனது மகனான அன்புமணி ராமதாசை தலைவராக அறிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதே நேரத்தில் அப்போது தலைவராக இருந்த ஜிகே மணி கௌரவ தலைவராக நியமிக்கப்பட்டார். இளைஞர் அணி தலைவர் பதவி தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே மறைமுக மோதல் நடைபெற்று வந்தது.

அன்புமணி ராமதாஸ்
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வன்னியர் சங்க பெருவிழா மகாபலிபுரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டுக்குழு தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்ட நிலையில், திடீரென அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்ததோடு செயல்தலைவராகவும் அறிவித்தார் ராமதாஸ். அதே நேரத்தில் கட்சியின் பொதுக்குழு எடுத்த முடிவின்படி நான் தான் தலைவர் எனக் கூறி வந்தார் அன்புமணி. இரு தரப்பு மாறி மாறி பேசி வந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர்களை நீக்குவதாக அறிவித்தார் ராமதாஸ்.
பாமக உட்கட்சி மோதல்
அதே நேரத்தில் தனது உத்தரவின் பெயரில் தான் நிர்வாகிகளை நீக்கவும் நியமனம் செய்யவும் முடியும் என அன்புமணி கூறினார். இதற்கிடையே இரு தரப்பும் பொதுக்குழுவை நடத்தியது. இந்த நிலையில் அன்புமணி பொதுக்குழுவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் அளித்ததாக பேசினார் வழக்கறிஞரான பாலு. அதே நேரத்தில் பொய்யான தகவல்களை கூறி கடிதம் பெற்று இருப்பதாக ராமதாஸ் தரப்பு விமர்சித்தது. இது ஒரு புறம் இருக்க சட்டமன்றத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் தான் சட்டமன்ற குழு தலைவராகவும் இருக்க வேண்டும் என அன்புமணி தரப்பு கடிதம் அனுப்பியது. ஆனால் சபாநாயகர் அதை ஏற்காத நிலையில் அன்புமணி நீதிமன்றத்தை நாட இருப்பதாக கூறப்பட்டது.
தேர்தல் ஆணையம்
இப்படி இரு தரப்பும் மாறி மாறி பேசி வந்து நிலையில் சமீபத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். ராமதாஸின் கடிதத்துக்கு பதில் அனுப்பிய தேர்தல் ஆணையம், அன்புமணி தான் தலைவர் எனவும் கட்சி சின்னம், பெயர், கொடி ஆகியவை அவருக்குத்தான் சொந்தம் என கூறி அதிர வைத்தது. இதனால் ராமதாஸ் தரப்பு கடும் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளது. இது ஒரு புறம் இருக்க கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவை தங்கள் தரப்பில் இருப்பதால் இருப்பதை உறுதி செய்திருப்பதால் உற்சாகமடைந்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி அரசியல் திட்டம்
இந்த நிலையில் பாமக 2026 தேர்தலில் போட்டியிடப் போகும் கூட்டணியை அன்புமணி ராமதாஸ் உறுதி செய்து விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாஜக பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டாவை அன்புமணி சந்தித்து பேசி இருந்தார். இது மட்டுமல்லாமல் அதிமுகவுடனும் அன்புமணி ராமதாஸ் பேசியதாக சொல்லப்படும் நிலையில் 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழக வெற்றி கழக தரப்பு அன்புமணி ராமதாஸ் உடன் கூட்டணி சேர வேண்டும் என விரும்பும் நிலையில், இந்த சீட்டு எண்ணிக்கைகள் சற்று அதிகரிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. கட்சியின் முழு அதிகாரமும் தனது கைக்கு வந்திருக்கும் நிலையில் அன்புமணி ராமதாஸ் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications