Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆத்தாடி.. இதுக்கு விமானத்திலேயே போயிடலாமே! “கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்” - கொந்தளித்த அன்புமணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து மதுரைக்கு ரூ.4499, கோவைக்கு ரூ.4970 கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையத்தை அமைக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்து உள்ளதாவது, "தமிழ்நாட்டில் காந்தியடிகள் பிறந்தநாள், பூசை விடுமுறை, தீபஒளி திருநாள் விடுமுறை ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கின்றன. விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பும் நடுத்தர மக்களை கசக்கிப் பிழியும் ஆம்னி பேருந்துகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

PMK president Anbumani condemn omni bus ticket price hike

அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் சனி, ஞாயிறு, காந்தியடிகள் பிறந்தநாள் என 3 நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றவர்கள் இன்று மீண்டும் சென்னைக்கு திரும்ப வேண்டும்.

ஏராளமான மக்கள் வெளியூர்களுக்கு சென்றிருப்பதையும், அவர்கள் அனைவரும் சென்னைக்கு திரும்புவதற்கு தேவையான அளவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படாததையும் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்து நிர்வாகங்கள், அவற்றின் கட்டணத்தை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளன.

அக்டோபர் 2 ஆம் நாளான இன்று இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு திரும்ப அதிக அளவாக ரூ.4460 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெல்லையை விட குறைந்த தொலைவு கொண்ட மதுரையில் இருந்து சென்னைக்கு, அதை விட அதிகமாக ரூ.4499 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையில் இருந்து சென்னைக்கு ரூ.4970, திருச்சியிலிருந்து சென்னைக்கு ரூ.4410 கட்டணம் பெறப்படுகிறது.

பூசை விடுமுறை நாட்களுக்காக வரும் 20 ஆம் நாள் சென்னையிலிருந்து மதுரை செல்லவும், விடுமுறை முடிந்து 24 ஆம் நாள் சென்னைக்கு திரும்பவும் அதிக அளவாக ரூ.4440 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதேநாட்களில் சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்ல ரூ.4560, அங்கிருந்து சென்னை திரும்ப ரூ.4620 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து கோவைக்கு செல்ல ரூ.3700, சென்னைக்கு திரும்ப ரூ.3753 என்ற அளவிலும், சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ.4500, அங்கிருந்து சென்னைக்கு ரூ.4440 என்ற அளவிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நாட்களில் சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லவும், அங்கிருந்து சென்னை திரும்பவும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இருக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளில் ரூ.459, படுக்கை வசதி பேருந்துகளில் ரூ.920 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை விட தனியார் பேருந்துகளில் 10 மடங்கு வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதே காலத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் செல்ல ரூ.3,419 மட்டும் தான் கட்டணம். விமானத்தை விட ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், அதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான காரணமும் நமக்கு விளங்கவில்லை.

ஒவ்வொரு முறையும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை குறித்து தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி எச்சரித்து வருகிறது. ஆனால், அரசோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் பெயரளவில் சில பேருந்துகளுக்கு மட்டும் சில ஆயிரங்களை தண்டமாக விதித்து விட்டு கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டதாக கூறி விடுகிறது.

சில நேரங்களில் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர், தாம் யார் என்பதையே மறந்து விட்டு,''ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சேவை செய்யவில்லை. அரசு பேருந்து கட்டணத்தை, தனியார் பேருந்து கட்டணத்தோடு ஒப்பிடுவது தவறு. தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்று தெரிந்துதான் மக்கள் பயணம் செய்கிறார்கள். அவர்கள் புகாரும் செய்யவில்லை. தனியார் பேருந்துகளின் கட்டணம் ஏழை மக்களை பாதிக்கவில்லை'' என்று விளக்கம் அளிக்கிறார்.

இது தான் தனியார் ஆம்னி பேருந்துகள் அவற்றின் விருப்பம் போல கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கான துணிச்சலை அளிக்கிறது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை காலம் காலமாகவே தொடர்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது.

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அவற்றின் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது. மோட்டார் வாகன சட்டத்தின் 67-ஆவது பிரிவின்படி ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு தான் நிர்ணயிக்க வேண்டும்.

கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க வேண்டும்'' என்று 2016-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அந்தத் தீர்ப்பின் மீது 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+