பாமக சித்திரை முழு நிலவு மாநாடு.. மாமல்லபுரத்தில் குவியும் தொண்டர்கள்! ராமதாஸ் திட்டம் என்ன?
சென்னை: பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் 1.80 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாமக தொண்டர்கள் வருகை தருகிறார்கள். இந்த மாநாட்டில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரியும், மதுவிலக்கு, பெண்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
பாமகவின் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு இன்று மாலை பிரமாண்டமாக நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையில் திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1.80 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

பாமகவின் பிரமாண்ட மாநாடு
இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து தொண்டர்கள் வருகை தருகிறார்கள். நிகழ்ச்சியினை தொண்டர்கள் பார்க்கும் வகையில் 3 இடங்களில் ராட்சத எல் இ டி திரை அமைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியை காணும் வகையில் இந்த ராட்சத எல் இ டி திரைகளும், இதேபோன்று 40க்கு 20 என்ற அளவில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் எல் இ டி திரைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என்பதால், எந்தவித அசம்பாவிதமும் நடந்திடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன. யாருக்கும் காயம் ஏற்பட்டாலோ, வேறு ஏதும் மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ அவர்களுக்கு உதவுவதற்காக மாநாட்டு திடலில் 15 ஆம்புலன்ஸ்களும், மருத்துவ குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
மாநாட்டில் தொண்டர்கள் தண்ணீர் அருந்துவதற்காக 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பட வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக டாக்டர் அன்புமணி ராமதாஸ் சில அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் அனைவரும் போலீசார் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும்.
மாநாட்டுக்கு வரும் போதும் சரி, மாநாடு முடிந்து வீடு திரும்பும்போது சரி அமைதியை கடைப்பிடிக்க வேண்டும். போலீசாரின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்க வேண்டும் அமைதியாக பத்திரமாக வீடு திரும்பவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இசை, கலை நிகழ்ச்சி
இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாட்டில், ஆரம்ப நிகழ்ச்சியாக புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி நடக்கிறது தொடர்ந்து, நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்படும்.
இதன் பின்னர், மாலை 6 மணியளவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மாநாட்டு திடலுக்கு வருகிறார். அப்போது, மேடையில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும். தொடர்ந்து, வன்னியர் சங்க கொடியை ராமதாஸ் ஏற்றி வைக்கிறார். பின்னர், ராமதாஸ் குறித்த வரலாற்று குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
என்னென்ன தீர்மானங்கள்
இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவது, பெண்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும், மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன்பின்னர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் உரையாற்றுவர்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பாமகவின் இந்த மாநாடு கவனம் பெற்றுள்ளது. பாமக தனது தொண்டர்கள் பலத்தை காட்ட இந்த கூட்டம் ஒரு சான்றாக இருக்கும் என்று நம்புகிறது. மேலும் இந்த தேர்தலில் யாருடன் பாமக கூட்டணி வைக்கும் என்பது இந்த மாநாட்டின் போது தெரியவரலாம் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications