"பெண்கள் பாதுகாப்பு திலகம்" செளமியா அன்புமணி.. பாமக மகளிரணி கூட்டத்தில் கொடுத்த புது பட்டம்!
சென்னை: பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணிக்கு, பாமக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் "பெண்கள் பாதுகாப்பு திலகம்" என்ற புதிய பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் செளமியா அன்புமணி தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகளிரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
சென்னை ஈசிஆரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாமக மகளிரணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணி கலந்து கொண்டார். இதில் பாமக அமைப்பு ரீதியாக வலுவாக உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தினர்.

அன்புமணியை தொடர்ந்து செளமியா அன்புமணியும் விரைவில் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மகளிரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகவும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. இதில் செளமியா அன்புமணி பேசுகையில், என்ன உடை உடுத்துகிறாய்? அந்த நேரத்தில் அங்கு ஏன் சென்றாய்?
தனியாக ஏன் சென்றாய்? என்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை கேள்வி கேட்பவர்கள் மனநோய் உள்ளவர்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பாமக மகளிரணி நிர்வாகிகள் சார்பாக பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் செளமியா அன்புமணிக்கு, பாமக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் "பெண்கள் பாதுகாப்பு திலகம்" என்ற புதிய பட்டம் அளிக்கப்பட்டது.
சட்டசபைத் தேர்தலில் மகளிர் வாக்குகளை பெறுவதற்காக பாமக தரப்பில் செளமியா அன்புமணி முன்னிறுத்தப்படுவதாக பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் தொகுதியில் போட்டியிட்ட செளமியா அன்புமணி, திமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். அதன்பின் பாமகவின் செயல்பாடுகளில் செளமியா அன்புமணியின் பங்கும் அதிகரித்தது.
ஆனால் ராமதாஸ் தரப்பில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அன்புமணியும், செளமியாவுமே காரணம் என்று குற்றம்சாட்டி இருந்தார். அதுமட்டுமல்லாமல் செளமியா அன்புமணிக்கு போட்டியாகவே தன்னுடைய மகள் காந்திமதிக்கு செயல் தலைவர் பொறுப்பை ராமதாஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications