'அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது..' 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி.. பாமக அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக பாமக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகு சில ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
இதனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பிய பல கோடி நிதியும் திரும்பி அனுப்பப்பட்டன. மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடைபெற வேண்டிய பல்வேறு பணிகள் அப்படியே தேங்கின.

உள்ளாட்சித் தேர்தல்
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்பைத் தொடர்ந்து கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகள் ஆகியவற்றில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகளில் விரைவாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தேர்தல் அறிவிப்பு
இந்த சூழலில் தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி முறிந்தது
இந்தச் சூழலில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக பாமக அறிவித்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது. கட்சியின் வளர்ச்சி கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்து குறிப்பிடத்தக்கது.

ஆலோசனைக் கூட்டம்
இது தொடர்பாக பாமக தலைவர் ஜி கே மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத, புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கக் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில், எனது தலைமையில், இணைய வழியில் இன்று மாலை நடைபெற்றது.

தனித்து போட்டி
அக்கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதனடிப்படையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருப்ப மனு
ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து நாளையும், நாளை மறுநாளும் ( செப்டம்பர் 15 மற்றும் 16-ஆம் நாட்கள்) விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலைக் குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications