என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது போல செயல்படுகிறார் அன்புமணி - ராமதாஸ் பரபர குற்றச்சாட்டு!
சென்னை: பாமகவில் மீண்டும் ராமதாஸ் - அன்புமணி மோதல் முற்றி வருகிறது. இந்நிலையில், தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், "நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன" எனத் தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை தோறும் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து வருகிறார் ராமதாஸ். இந்நிலையில் இன்றைய சந்திப்பில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

ராமதாஸ் - அன்புமணி மோதல்
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அக்கட்சியின் தலைவர் அன்புமணிக்கும் இடையே நடைபெற்று வரும் பிரச்சனை இன்னும் ஓயவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், நான் தான் தலைவர் என்று அன்புமணி பதிலடி கொடுத்தார். வன்னியர் சங்க மாநாட்டிலும் அந்த பிரச்சனை எதிரொலித்தது.
அண்மையில், அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசியல் விவகாரங்கள், குடும்ப விவகாரங்கள் என அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் ராமதாஸ். இதனால் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சமாதான முயற்சிகள்
பாமகவில் நிலவி வரும் தந்தை - மகன் இடையேயான மோதலுக்கு முடிவு கட்ட, பல தரப்பிலும் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 5 ஆம் தேதி ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில், அன்புமணி சந்தித்துப் பேசினார். அதே நாளில், பாஜகவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோரும் ராமதாஸை சந்தித்துப் பேசினர்.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே நிலவும் கருத்து வேறுபாடு ஒருபுறம் இருக்க, இருவரும் தனித்தனியாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் படலம் தொடர்கதையாகி வருகிறது. அன்புமணி ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களை கட்சியை விட்டு நீக்கி வரும் ராமதாஸ், பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் கே.பாலுவை நீக்கி அதிரடி காட்டினார்.
நீக்கிய ராமதாஸ் - நியமித்த அன்புமணி
ஆனால், வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை, சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி தங்கள் தலைவராக வழக்கறிஞர் கே.பாலு தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், 22 ஆண்டுகளாக இயங்கி வரும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இது ஒரு புறம் இருக்க கட்சியின் மாவட்டச் செயலாளர்களை பல கட்டங்களாக சந்தித்து வரும் அன்புமணி அதன் ஒரு பகுதியாக மகளிர் அணி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பூம்புகாரில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி தலைமையில் பாமக மகளிர் மாநாடு நடைபெறும் என ராமதாஸ் அறிவித்துள்ள நிலையில், மகளிர் அணி நிர்வாகிகளை அன்புமணி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
சுற்றுப்பயணம் செல்ல அன்புமணி திட்டம்
இதற்கிடையில், சட்டமன்றத் தொகுதி வாரியாக உரிமை மீட்பு நடைபயணம் செல்ல அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும், அதை ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாமகவில் தனக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அன்புமணி தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது.
இன்று ராமதாஸ் பேட்டி
இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது பேசிய ராமதாஸ்,"எங்கள் இருவருடைய சமரசப் பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. அவர்கள் இங்கே வந்தார்கள்... நான் அங்கே போனேன்... பேச்சுவார்த்தை சென்றது. ஆனால், கடைசியில் பேச்சுவார்த்தை 'டிரா'வில் முடிந்துவிட்டது. 14 பஞ்சாயத்துக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் நான் தொடங்கிய 34 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் . இது தான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டேன்.
அன்புமணிக்காக தலைவர் பதவி விட்டுத்தர தயார் என்று கூறினேன். அதற்காக, மாநாட்டிற்கு முன்பு, கௌரவ தலைவர், சமூக முன்னேற்ற சங்கத்தினுடைய தலைவர் இருவரும் அன்புமணியை சந்திக்க செல்ல இருந்தனர். ஆனால், 'வரவேண்டாம்... போன்லேயே சொல்லுங்க' என்று அவர் கூறிவிட்டார். மாநாடு மேட்டையிலேயே கையெழுத்து போட்டுதர தயாராக இருப்பதாக கூறினேன் அதற்கும் ஏற்கவில்லை. அதனால் இயற்கையான கோபம் வந்து நீயா, நானா பார்த்துவிடுகிறேன் என வந்துவிட்டேன்.
என்னை நடைபிணம் ஆக்கி
இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? உரிமை இல்லையா என்று கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது. குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம், தந்தையை மிஞ்சிய பிள்ளை இருக்கக்கூடாது. இதுவே தர்மம். இதுவே சார்ஸ்த்திர சம்பிரதாயம் ஆகும். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவ படத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர்.
என்னை நடைபிணம் ஆக்கி, என் பெயரில் நடைபயணம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே. ஒவ்வொரு செங்கலாக கட்டிய கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications