மாநில கட்சி அந்தஸ்து இல்லை..விக்கிரவாண்டியில் பழுக்குமா மாம்பழம்? டெல்லிக்கு பறந்த கடிதம்..பரபர பாமக
சென்னை: மக்களவைத் தேர்தலில் 10 இடங்களில் போட்டியிட்ட பாமக 4.23 % வாக்குகளை மட்டுமே பெற்ற நிலையில் மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு பாமக கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்திருக்கிறது. அதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியும் அடங்கும்.

கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி மரணமடைந்த நிலையில் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு திமுகவே தனது வேட்பாளரை களம் இறக்குகிறது.
அன்னியூர் சிவா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுக இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் கடந்த தேர்தலில் புகழேந்தியிடம் தோற்ற முத்தமிழ்ச் செல்வனே போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். விழுப்புரத்தைச் சேர்ந்த அபிநயா கடந்த மக்களவைத் தேர்தல் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், அவரது வாக்குகள் பலவும் அபிநயாவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்களவை தேர்தலைப் போலவே இந்த இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. திமுக-அதிமுக-நாம் தமிழர் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் தற்போது பாமகவும் களத்தில் குதித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் தைலாபுரத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதனையடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அந்த கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்ட போது விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி சுமார் 41000 வாக்குகளை பேசியிருந்தார். அதன் காரணமாகவே இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணியை களத்தில் இறக்கி இருக்கிறது.
தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வரும் அன்புமணிக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் வாக்கு சேகரிக்க இருக்கின்றனர். இதனிடையே விக்கிரவாண்டி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வெறும் 4.3% வாக்குகளையே பெற்றது. இதன் காரணமாக அந்த கட்சி தனது மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதன் காரணமாக பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைப்பது சிக்கலை ஏற்படுத்தும். கடந்த காலங்களில் மாநில கட்சி அந்தஸ்து பெறாத நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை தற்போது மாநில கட்சி அந்தஸ்து பெற்றதால் சிக்கல் இன்றி சின்னத்தை தேர்ந்தெடுக்கும் வகையில் பலமாக இருக்கிறது.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி மாநில கட்சி அந்தஸ்தை இழந்ததால் மாம்பழம் சின்னம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில கட்சி அந்தஸ்தை இழந்த மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் மக்களவைத் தேர்தலில் ஒதுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான பதில் கிடைத்த பிறகு பாட்டாளி மக்கள் கட்சி மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுமா என்பது குறித்து தெரியவரும்.












Click it and Unblock the Notifications