திருவள்ளுவரை கொண்டாடுபவர்கள்.. திருக்குறள் பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்? கவிஞர் வைரமுத்து கேள்வி
சென்னை: சமீபத்தில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், "திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள், திருக்குறளை பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்?" என்று கவிஞர் வைரமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றம் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, சிபிஐ மற்றும் சிபிஎம் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின்,

"சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. நிலையானதாகவும், மாற்ற முடியாததாகவும் இருப்பதன் அர்த்தமே சனாதனம். ஆனால், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது, அனைத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை எதிர்ப்பது அல்ல, ஒழிக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்" என்று பேசியிருந்தார்.
இவரது பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் சாமியார் ஒருவர் உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்துள்ளார். இதுபோன்ற கண்டனங்களுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "நான் எந்த சட்ட சவாலையும் சந்திக்க தயாராக உள்ளேன். இது போன்ற காவி மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியை பின்தொடர்பவர்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம்

இதனை இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன், என்றென்றைக்கும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் இருந்து ஒரு துளி கூட பின்வாங்க மாட்டோம்" என்று கராறாக கூறியிருந்தார். இருப்பினும் பாஜக, அமைச்சர் உதயநிதியை தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்நிலையில் உதயநிதியின் கருத்துக்கு கவிஞர் வைரமுத்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் X சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளதாவது,
"சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என்பது சனாதனக் கருத்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு. திருக்குறளைத்தான் உதயநிதி பேசியிருக்கிறார், திருவள்ளுவரைக் கொண்டாடுகிறவர்கள் திருக்குறள் பேசிய உதயநிதியை மட்டும் எதிர்ப்பது ஏன்? அரசியல்" என்று கூறியுள்ளார். இவரது ட்வீட் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications