திருப்பியனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை.. மீண்டும் அனுப்புவது சட்டமன்ற உரிமை: வைரமுத்து
சென்னை : நீட் தேர்வு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள நிலையில், திருப்பி அனுப்புவது ராஜ்பவனில் மேட்டிமை மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனம் போட்டு இருக்கும் கவிப்பேரரசு என கொண்டாடப்படுபவர் கவிஞர் வைரமுத்து.
கவிஞர் கண்ணதாசன் வாலி அடுத்தபடியாக தமிழ் திரையுலகில் பெரும் பான்மையான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது நாவல்கள் கவிதைத் தொகுப்புகள் மூலம் மிகவும் பிரபலமானவர் கவிஞர் வைரமுத்து.

கவிஞர் வைரமுத்து ட்விட்டர்
கள்ளிக்காட்டு இதிகாசம் மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட நாவல்கள் தற்போது வரை தமிழ் வாசிப்பாளர்களின் புத்தக அலமாரிகளை அலங்கரித்து வருகிறது. இருந்தபோதும் நவீன யுகத்திலும் இளைஞர்களுக்கு ஈடாக செயலாற்றி வருபவர் கவிஞர் வைரமுத்து. தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கவிஞர் வைரமுத்து, அவ்வப்போது சமூகக் கருத்துக்களையும் அரசியல் ரீதியான விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். இந்நிலையில் நீட்தேர்வு விவகாரத்தில் ஆளுநர் முறிவு குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

நீட் தேர்வு விவகாரம்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தியதாக ஆளுநர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை சட்டமன்றத்திற்கே ஆளுநர் திருப்பி அனுப்பியதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வைரமுத்து கருத்து
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கூறிவரும் நிலையில் இதுகுறித்து முதல்வர் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நீட் தேர்வு விவகாரம் குறித்து முதலமைச்சர் கூட்ட போகும் அனைத்து கட்சி கூட்டத்தின் முடிவை ராஜ்பவன் ஜனாதிபதி மாளிகையை மட்டுமல்ல ஏழைகளும் கண்ணீரோடு கவனிக்கின்றனர் என கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராஜ்பவனின் மேட்டிமை
இதுகுறித்து பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, "திருப்பி அனுப்புவது ராஜ்பவனின் மேட்டிமை மீண்டும் அனுப்புவது சட்டமன்றத்தின் உரிமை, நாளை முதலமைச்சர் கூட்டும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் முடிவை, ராஜ்பவனும் ஜனாதிபதி மாளிகையும் மட்டுமல்ல இருள்கட்டிக் கிடக்கும் ஏழைக் குடிகளின் ஓலைக் குடிசைகளும் கண்ணில் நீரோடு கவனிக்கின்றன" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications