இந்து மக்கள் கட்சி மாநாட்டுக்கு தடை? கொதித்து எழுந்த அண்ணாமலை, அர்ஜுன் சம்பத்!
சென்னை: இந்து மக்கள் கட்சி நடத்தும், தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாட்டிற்கு, தமிழக அரசின் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15 ஆம் தேதி, 'தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு' சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகிப்பார் என்றும், அன்று மாலை 3 மணிக்கு, ஆன்மிகப் பேரணியும், 4 மணிக்கு, பொதுக் கூட்டமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை உயுர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில், "இந்து மக்கள் கட்சி சார்பில், மார்ச் 15 ஆம் தேதி, சென்னை, ஒய்.எம்.சி.ஏ திடலில், தமிழ், தமிழர், தமிழகம் உரிமை மீட்பு மாநாடு நடக்க உள்ளது. இந்து விரோத திமுக, அரசை அகற்றி, தமிழகத்தில் அ.தி.மு.க, தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வழி வகுக்கும், இம் மாநாட்டுக்கு உள்நோக்கத்துடன், திமுக, அரசின் காவல் துறை தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுதும் மாநாடு சம்பந்தமான சுவரொட்டிகள், விளம்பரங்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். சுவர் விளம்பரங்களை அழிப்பதோடு, இந்து மக்கள் கட்சி தொண்டர்களையும், போலீசார் மிரட்டி பொய் வழக்கு போட்டு வருகின்றனர். மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள், உளவுத்துறை வாயிலாக மிரட்டப்படுகின்றனர். இது கடும் கண்டனத்திற்குரியது. இந்தத் தடையை சட்டபூர்வமாக அணுகி, மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவோம்." எனக் கூறியுள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்கு, திமுக அரசு தடை விதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு அரசியல் கட்சி மாநாட்டுக்கு அனுமதி மறுப்பது, விளம்பரங்களை அகற்றுவது, நிர்வாகிகளை மிரட்டுவது உள்ளிட்ட, திமுக அரசின் செயல்பாடுகள், தமிழகத்தில் ஜனநாயகத்தின் நிலையை கேள்விக்குறியாக்குகின்றன.
நம் நாட்டுக்கு சற்றும் தொடர்பே இல்லாத பிரச்சனைகளுக்காக, திமுக கூட்டணி கட்சிகள் எந்தத் தடையுமின்றி, கூட்டங்கள், பேரணிகள் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஹிந்து மக்கள் ஒற்றுமை பேரணிக்கும், உள்ளரங்கில் நடக்கும் மாநாட்டிற்கும் அனுமதி மறுப்பது ஏன். இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்பாட்டை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications