அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது வழக்குப்பதிவு.. இது தான் காரணம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது 6 பிரிவுகளில் தண்டையார்பேட்டை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த சனிக்கிழமை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் மொத்தம் 268 வாக்கு எண்ணும் மையங்களில் நாளைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே சிறுசிறு பூசல்கள் நடந்தது. இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் சென்னையில் 2 வார்டுகள் உட்பட மாநிலத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மட்டும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தாக்குதல்
இதனிடையே கடந்த சனிக்கிழமை சென்னை ராயபுரத்தில் 49ஆவது வார்டில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் சிலர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டினர். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு வந்திருந்தார். அந்த சமயத்தில் கள்ள ஓட்டுப் போட்டுவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறி ஒருவரைப் பிடித்து அதிமுகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

கண்டனம்
மேலும், அந்த நபரின் சட்டையைக் கழற்றி அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தான் அந்த நபரை போலீசாரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதற்கு இணையத்தில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பொது இடத்தில் வைத்து ஒருவரைத் தாக்கி, அரை நிர்வாணப்படுத்தியது சட்டப்படி குற்றம் எனப் பலரும் சாடினர்.

ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு
கடந்த காலங்களில் சபாநாயகர், அமைச்சர் எனப் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த ஜெயக்குமார் இதைத் தடுக்காமல் அதிமுகவினருடன் இணைந்து அவரை தாக்கியதாக திமுக தரப்பு குற்றஞ்சாட்டியது. இந்தச் சூழலில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவர் அளித்த புகாரில் தண்டையார்பேட்டை போலீசார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுகவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு
அவர்கள் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் திமுகவினர் தன்னை தாக்கியதாக ஜெயக்குமாரின் கார் ஓட்டுநர் ஜெகநாதன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத 10 திமுகவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை மறியல்
முன்னதாக கள்ள ஓட்டுப் போட்டதாக அதிமுகவினர் பிடித்து தந்த அந்த நபரை போலீசார் சற்று நேரத்திலேயே விடுவிதித்தாகவும் தகவல் வெளியானது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் ராயாபுரம் பகுதியில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications