சிவகங்கை பாஜக பிரமுகர் கொலை வழக்கு.. தேடப்பட்டு வந்தவர் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு.. பரபரப்பு
சென்னை: சிவகங்கையில் பாஜக பிரமுகர் நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 5 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வந்த நிலையில், அதில் வசந்த் என்பவர் போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் போலீசார் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வகுமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை ஒன்றும் நடத்தி வந்தார். பாஜக கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்ட செயலாளராகவும் செல்வகுமார் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வந்துகொண்டிருந்தார். அப்போது திடிரேன இவரது பைக்கை வழிமறித்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தது. நடுரோட்டில் பாஜக பிரமுகர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் பாஜக நிர்வாகிகள் குற்றவாளிகளை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் பாஜக பிரமுகர் செல்வகுமார் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் வசந்த் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் குற்றவாளி வசந்த் என்பவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்துள்ளார். அரிவாளால் சார்பு ஆய்வாளர் பிரதாப் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து போலீசார் வசந்த் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவரும் படுகாயமடைந்தார். இதையடுத்து இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் சிவகங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications