உடலுறவு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு! மதுரை மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் ஐக்கியம்?
திருப்பூர்: திருப்பூரில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு எந்த வகையான பொறுப்பில் இருக்கிறார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் ஆஸ்திரேலியாவில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அசோக் நகரில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இது மேல்நிலைப் பள்ளியாகும். இங்கு 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மாணவ, மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியை பள்ளி தலைமை ஆசிரியை முடிவு செய்தார்.

இதற்காக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவர் கடந்த வாரம் வரவழைக்கப்பட்டார். அவர் திடீரென சம்பந்தமே இல்லாமல் மறுபிறவி குறித்து பேசியது சர்ச்சையாகியுள்ளது. அதாவது மகாவிஷ்ணு பேசுகையில் மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது.
போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள். அது போல் கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் ஒருவரது இயலாமையை பேசியுள்ளார்.
அப்போது அங்கிருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், மகாவிஷ்ணுவின் பேச்சை கேட்டு அதிர்ந்து போய் கடுமையாக எதிர்த்துள்ளார். அப்போது அவரை , மகாவிஷ்ணு, அறிவற்றவர் என விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையானது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என கடும் கண்டனத்தை தெரிவித்தனர். படிக்கும் பிஞ்சுகளின் மனதில் நஞ்சை கலக்கும் விதமாக பேசுவதா என மகாவிஷ்ணுவுக்கு கண்டனங்கள் எழுந்தன. இது குறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
அந்த விளக்கத்தில் என்ன தலைப்பு கொடுக்கப்பட்டது, எந்த நிகழ்ச்சிக்காக மகாவிஷ்ணு வரவழைக்கப்பட்டார் என கேள்விகளை எழுப்பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் எங்கள் ஆசிரியரை தரக்குறைவாக பேசிய மகாவிஷ்ணுவை சும்மா விட மாட்டேன் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் திருப்பூரில் உள்ள குளத்துப்பாளையத்தில் பரம்பொருள் எனும் அறக்கட்டளையை வைத்து மகாவிஷ்ணு நடத்தி வருகிறார் என தெரியவந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல்வேறு ஆன்மீக சொற்பொழிவுகளை மகாவிஷ்ணு உள்நாடு, வெளிநாடுகளில் நடத்தி வருகிறார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மதுரை மகா என்ற பெயரில் சன் டிவியில் அசத்த போவது யாரு எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்.
இவர் தற்போது அசைவம் சாப்பிடுவது, சைவம் சாப்பிடுவது, உடலுறவு உள்ளிட்டவை குறித்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் மகாவிஷ்ணு குறித்து அவருடைய பரம்பொருள் அறக்கட்டளையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த அறக்கட்டளைக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறையே அவர் வருவதாகவும் சொல்லப்படுகிறது.
சென்னை அசோக் நகர் பள்ளியில் இந்த விவகாரம் நடந்து ஒரு வாரம் ஆகியிருக்கும். இந்த நிலையில் மகாவிஷ்ணு தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தலைத்தூக்கும் என தெரிந்தே அவர் ஆஸ்திரேலியாவுக்கு தப்பி ஓட்டமா இல்லை வேறு நிகழ்ச்சிக்காக மகாவிஷ்ணு அங்கே சென்றாரா என தெரியவில்லை. தற்போது இந்த விவகாரம் வெளியே வந்துள்ள நிலையில் அவர் இந்தியாவுக்கு திரும்புவாரா இல்லை ஆஸ்திரேலியாவிலேயே இருந்து விடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications