கூவம் ஆற்றில் அடித்து சென்ற கார்! சினிமா பாணியில் கண்ணாடியை உடைத்து ஓனரை காப்பாற்றிய போலீஸ்! திக்!
சென்னை: சென்னை மதுரவாயல் கூவம் தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் அவ்வழியாக சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தது. இதையடுத்து தகவலறிந்த போலீஸார் கார் கண்ணாடியை உடைத்து உரிமையாளரை காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டில் கூவம் நதி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதியின் குறுக்கே ஒரு தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

அந்த தரைப்பாலத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அண்மையில் ஃபெஞ்சல் புயலால் பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மதுரவாயல் அருகே ஓடும் கூவம் ஆற்றிலும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கி தண்ணீர் ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவ்வழியாக சுனில் வர்கீஸ் என்பவர் இன்று காலை காரில் வந்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் தரைப்பாலத்தில் வெள்ளம் செல்வதால் போக வேண்டாம் என எச்சரித்ததாக சொல்லப்படுகிறது.
எனினும் தரைப்பாலத்தை கிராஸ் செய்துவிடலாம் என நினைத்து தனது காரை இயக்கினார். அப்போது அவருடைய கார் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு நல்வாய்ப்பாக பாலத்தின் தடுப்பு அருகே சிக்கிக் கொண்டது. இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அங்கு உயிருக்கு போராடிக் கொண்ட வர்கீஸை கயிறு கட்டி சென்று காரின் கண்ணாடிகளை உடைத்து சினிமா பாணியில் காப்பாற்றினர். அது போல் அவருடைய காரையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தரைப்பாலத்தில் எப்படியாவது கடந்து விடலாம் என்ற தைரியத்தில் சென்றால் தண்ணீரின் வேகத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது என்பதால் இந்த விஷப்பரீட்சைகளை நிறுத்துமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications