சென்னை சென்ட்ரலில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. விற்க முயன்ற 2 பேரை காட்டிக்கொடுத்த கேமரா.. அதிரடி
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளிமாநில தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட போலீசார் 4 மணிநேரத்தில் குழந்தையை மீட்டனர். மேலும் எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்க பேரம் பேசிய 2 பேரை அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சுஜித் மண்டல். இவரது மனைவி சஞ்சனா. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் சுஜித் மண்டல் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்னை வந்தனர்.

இன்று மதியம் 1.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அருகே அவர்கள் நின்றனர். குழந்தை டிக்கெட் கவுண்ட்டர் அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென்று குழந்தை மாயமானது.
குழந்தை காணாமல் போனதை அறிந்த சுஜித் மண்டல் - சஞ்சனா தம்பதி ரயில் நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்தது.
அதாவது சுஜித் மண்டல் - சஞ்சனா தம்பதியின் குழந்தையை 2 பேர் கடத்தி செல்வது தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் கடத்தல்காரர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து ரயில்வே போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். சென்னை முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே தான் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு போன் ஒன்று வந்தது. சென்னை எண்ணூர் பகுதியில் 2 பேர் சந்தேகப்படும் படியாக உள்ளனர். அவர்கள் குழந்தையை கையில் வைத்து விற்பனை செய்ய பேரம் பேசுவதாக தெரிவிக்கப்பட்டது.
கட்டுப்பாட்டு அறை போலீசார் எண்ணூர் போலீசாரை அலர்ட் செய்தனர். சம்பவ இடத்துக்கு எண்ணூர் போலீசார் சென்றபோது அங்கிருந்த பொதுமக்கள் குழந்தையுடன் 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தையை விற்பனை செய்வதற்காக கடத்தியவர்களின் பெயர்கள் கார்த்திக் மற்றும் செல்வம் என்பது தெரியவந்தது.
கைதான 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இருவரும் குழந்தையை ஏன் கடத்தினார்கள்? இதற்கு முன்பும் குழந்தை கடத்தலில் ஈடுபட்டனரா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மீட்கப்பட்ட குழந்தை சுஜித் மண்டல்-சஞ்சனா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒன்றரை வயது குழந்தை மதியம் 1.30 மணிக்கு கடத்தப்பட்ட நிலையில் அடுத்த 4 மணிநேரத்தில் மாலை 5.30 மணிக்கு போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications