ஈஷா யோகா மையத்தில் பணிபுரிந்து வந்த 6 பேர் மாயமாகி உள்ளனர்..சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீசார் தகவல்
சென்னை: ஈஷா யோகா மையத்தில் மாயமானவர்கள் குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் நிலையில், அந்த வழக்கு விசாரணையில் ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர் இதுவரை மாயமாகி இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஈஷா யோகா மையம் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நமது நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல நாடுகளில் இருந்தும் இங்கே பலரும் வருகிறார்கள். யோகா குறித்து கற்கப் பலரும் அங்கே செல்கிறார்கள்.

இந்தச் சூழலில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டியை சேர்ந்த விவசாயி திருமலை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முக்கிய வழக்கு ஒன்றைத் தொடுத்து இருந்தார். அதாவது மாயமான தனது சகோதரரை மீட்டுத் தர வேண்டும் என அவர் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
சென்னை ஐகோர்ட்டில் மனு: அந்த மனுவில் திருமலை, "கடந்த 2007 முதல் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் தன்னார்வலராக பணியாற்றி வந்தார். இந்தச் சூழலில் கடந்தாண்டு மார்ச் 2ஆம் தேதி, ஈஷா யோகா மையத்தில் இருந்து என்னை தொலைப்பேசியில் அழைத்தனர். கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா எனக் கேட்ட அவர்கள், ஈஷா யோகா மையத்திற்கு அவர் 3 நாட்களாக வரவில்லை என்றும் தெரிவித்தனர்.
இது தொடர்பாகக் கடந்த ஆண்டு ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,ஓராண்டுக் காலமாக மந்தமான முறையில் விசாரணை நடந்து வருகிறது. எனவே, போலீஸ் விசாரணையைத் துரிதப்படுத்தி, காணாமல் போன என் சகோதரர் கணேசனை மீட்டுத் தர வேண்டும். அவரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
8 பேர் மாயம்: இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு போலீசார் சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அதாவது ஈஷா யோகா மையத்தில் பணிபுரிந்து வந்தவர்களில் 6 பேர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேதிகளில் காணாமல் போய் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் வழக்கறிஞர் ராஜ்திலக் தெரிவித்தார்.
இதைக் கேட்ட சென்னை ஐகோர்ட் நீதிபதிகள், காணாமல் போனவர்கள் குறித்த வழக்கைத் துரிதப்படுத்தி விசாரிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக உரியப் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்குச் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications