மாறிய 'பிட்ச்'.. சீன்லயே இல்லையே.. கரெக்டா வந்த ‘முடிவு’.. எடப்பாடிக்கு ‘லக்’.. பின்னணியில் டெல்லி?
இடைக்கால தீர்வு வழங்கப்பட்டதால், தீர்ப்பு தாமதமாகவே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சென்னை : அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு இடைத்தேர்தலுக்கு முன்பே வந்ததற்குப் பின்னணியில் பாஜகவின் கை இருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதாவது, ஈரோடு இடைத்தேர்தல் களம் கடந்த சில நாட்களாக திமுக - நாம் தமிழர் கட்சி இடையேயானதாக மாறிய சூழலில் அதிமுகவை சீனுக்குள் கொண்டு வருவதற்காகவே இந்த தீர்ப்பு இப்போது வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதையே உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
2024 தேர்தல் வரும்போதுதான் ஈபிஎஸ், ஓபிஎஸ் நிலை தெரியவரும் என்கிறார்கள்.

திமுக vs நாம் தமிழர்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் சூழலில், அங்கு திமுகவினருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் முற்றியுள்ளது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, திமுகவினர் கற்களைக் கொண்டு தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பான மோதலில் இரு கட்சித் தொண்டர்களும், போலீசாரும் காயமடைந்தனர். வார்த்தைப் போர் முற்றி, தேர்தல் களத்தில் அடிதடி சம்பவங்களும் அரங்கேறியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் ஈரோடு கிழக்கில் சுற்றிச் சுழன்று தேர்தல் பணியாற்றி வரும் நிலையில், களம் திமுக vs நாம் தமிழர் மோதல் என்று மாறியது அதிமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் தான், அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு 23ஆம் தேதி என உச்ச நீதிமன்றம் அதற்கு முந்தைய நாள் ஷெட்யூல் செய்தது. இடைத்தேர்தலுக்கு இடைக்கால தீர்வாக இரட்டை இலை சின்னம் பொதுக்குழு தேர்வு செய்த வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால், தீர்ப்பு தாமதமாகவே வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டு நேற்று தீர்ப்பும் வெளியிடப்பட்டது.

பாஜகவின் கை
அதிமுக பொதுக்குழு வழக்கில், இடைத்தேர்தலுக்கு முன்பே தீர்ப்பு வந்ததற்குப் பின்னணியில் டெல்லியின் கை இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இடைத்தேர்தலுக்கு முன்பு தீர்ப்பை வழங்குவதற்கான அவசியம் எதுவும் தற்போதைக்கு இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக - நாம் தமிழர் கட்சி இடையே மோதல்கள் அரங்கேறி வரும் நிலையில், அதை மாற்றி செல்வாக்கு செலுத்தும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.

சிவசேனா வழக்கு
சிவசேனா வழக்கில் ஷிண்டேவுக்கு ஆதரவான முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது. 76 சதவீத எம்.எல்.ஏ, எம்.பிக்கள் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் ஷிண்டேவுக்கு கட்சி உரிமையாக்கப்பட்டது. அந்தக் கணக்கில் பார்த்தால் எடப்பாடி பழனிசாமிக்கு கிட்டத்தட்ட 90 சதவீதம் ஆதரவு கிடைக்கும். அதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், தேர்தல் ஆணையமும் இறுதி முடிவை எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

சின்னம்
அதேசமயம், மகாராஷ்டிராவின் அந்தேரி இடைத்தேர்தலின்போது, உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே இரு அணிகளுக்கும் சின்னத்தை ஒதுக்காமல் முடக்கி வைத்தனர். இரு தரப்பும் தாக்கல் செய்த ஆதாரங்களை படித்துப் பார்க்க நேரமில்லை என்று சின்னத்தை முடக்கி வைத்தனர். அதேபோல, ஒரு முடிவை அதிமுக விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் எடுக்கவும் அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்து தேர்தல் ஆணையத்தை ஈபிஎஸ் அணி கோரினாலும், இந்த தீர்ப்பில் தாங்கள் முரண்படும் விஷயங்களை வைத்து ஓபிஎஸ் தரப்பும் முறையிடும். எனவே, 2024 தேர்தலில் தான் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸின் நிலை தெரியவரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications