ஈபிஎஸ்க்கு புதிய சிக்கல்? பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய மனு.. பிப்.,13ல் ஹைகோர்ட் விசாரணை
2019ல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களுடன் அரசாணை வெளியிடப்பட்ட விஷயத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் தலைமை செயலாளர் ஆகியோரிடம் விசாரிக்க வேண்டும் எனவும், இதில் தொடர்புடைய அப்போதைய கோவை எஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு புதிய சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
இதுதொடர்பான புகாரில் 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மனு
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐயிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்தது. தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக இந்த சம்பவம் நடந்தபோது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடந்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் தற்போது பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கான அரசாணை
இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த பாலசந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 2019ல் பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் அளித்த புகாரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இன்னும் முழுமையாக வழக்கு விசாரிக்கப்படவில்லை. இதற்கிடையே தமிழ்நாடு அரசு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து அரசாணை பிறப்பித்தது.

எஸ்பியை பணி நீக்கம் செய்ய வேண்டும்
இந்த அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் மற்றும் புகார் அளித்த நபரின் பெயர் வெளியிடப்பட்டது. இதனால் பிற பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமியிடம் விசாரணை
மேலும் அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை இடம்பெற செய்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அப்போதைய தலைமை செயலாளரிடம் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வரிடம் கடந்த ஆண்டு ஜனவரியில் புகார் மனு அளித்தேன். இந்த புகார் மனு கோவை மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்தாலும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இந்த கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

பிப்ரவரி 13ல் விசாரணை
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜா தலைமையிலான அமர்வில் வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 13) விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications