எமனாக மாறிய துரித உணவு.. பரோட்டா, பிரைட் ரைஸ் சாப்பிட்டு தூங்கிய இன்ஜினியர் உயிரிழப்பு! கதறும் மனைவி
துரித உணவுகளைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னை: புதுச்சேரியில் உள்ள வில்லியனுாரில் மருத்துவர்களின் எச்சரிக்கையை உணர்த்தும் வகையில், துரித உணவு சாப்பிட்ட நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த நவீனக் காலத்தில் நமது வாழ்க்கை முறை முற்றிலுமாக மாறியுள்ளது. இளம் வயது முதலே ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட காலம் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது நமது உடல்நிலையைப் பாதிக்கிறது.
அத்துடன் மாறி வரும் உணவு முறை, குறிப்பாகத் துரித உணவுகள் காரணமாகப் பலரது உடல்நிலையும் பாதித்து வருகிறது. இதனால் நீரிழிவு பாதிப்பு தொடங்கிப் பல வகையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது என்பதால் முடிந்தவரைத் துரித உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றே மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இருப்பினும், பெரும்பாலானோர் இதைக் கேட்பதாக இல்லை. இதனால் நமக்குப் பல விதமான பாதிப்புகள் ஏற்படுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது சென்னையில் நடந்துள்ளது.

மருத்துவர்கள்
பரோட்டா என்றாலே இங்கு பெரும்பாலானோருக்கு ரொம்பவே பிடிக்கும். தமிழ்நாட்டில் இரவு பரோட்டா இல்லாத ஊர்களை பார்க்கவே முடியாது. அந்தளவுக்கு அனைத்து இடங்களிலும் பரோட்டா கடைகள் இருக்கும்.பரோட்டா சாப்பிட்டால் வயிறு நிரம்பிய ஒரு உணர்வு கிடைக்கும் என்பதால் வருமானம் குறைவாக இருப்பவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் பரோட்டா சாப்பிடவே பலரும் விரும்புவார்கள். இருப்பினும், பரோட்டாவால் பல விதமான உடல்நல பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியே வருகின்றனர்.

புதுச்சேரி
மருத்துவர்களின் எச்சரிக்கையை உணர்த்தும் வகையிலான ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனுார் அடுத்துள்ள ஆரியப்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.. 33 வயதான இவர், சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். கொரோனா காலத்திற்குப் பிறகு வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார்..

பரோட்டா பிரைடு ரைஸ்
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாலை தனது மனைவி சுகந்தியுடன் புதுச்சேரிக்குச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீட்டிற்குத் திரும்பினார். இரவு தாமதமாகிவிட்டதால் அருகே சுல்தான்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு வாங்கியுள்ளனர். அந்த உணவகத்தில் இருந்து பரோட்டா மற்றும் பிரைடு ரைஸ் வாங்கி வந்துள்ளனர். அதைச் சாப்பிட்டுவிட்டு இருவரும் தூங்கிவிட்டனர்,

உயிரிழப்பு
இருப்பினும், மறுநாள் காலையில் முதலில் சுகந்தி எழுந்துள்ளார். அப்போது சத்தியமூர்த்தி பேச்சுமூச்சின்றி இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி, அச்சத்தில் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த சத்தியமூர்த்தியை வில்லியனுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் சத்தியமூர்த்தி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து சத்தியமூர்த்தியின் தந்தை செல்வராசு அளித்த புகாரின் அடிப்படையில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திடீரென சத்தியமூர்த்தி உயிரிழந்ததற்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இரவு அவர் சாப்பிட்ட உணவே உயிரிழப்பிற்குக் காரணம் என்று அவரது மனைவி சுகந்தி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications