சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்! கிளாம்பாக்கத்தில் மக்கள் கூட்டம்.. நெடுஞ்சாலையிலும் செம டிராபிக்
சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் பலரும் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகிறார்கள். சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 13ம் தேதி அதாவது செவ்வாய்க்கிழமை தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. ஜனவரி 14 முதல் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுகிறது.

பொங்கல் விடுமுறை:
அதாவது செவ்வாய் முதல் வியாழன் வரை பொங்கல் விடுமுறை நாட்கள் வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 14 முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறையாக இருக்கிறது.
அதேநேரம் இன்னும் சிலர் நாளை திங்கள்கிழமை ஒரு நாள் மட்டுமே இடையில் வேலை நாள் என்பதால், அன்றைய தினத்திலும் விடுமுறை எடுத்துவிட்டு இப்போது ஊருக்குக் கிளம்பிவிடுகிறார்கள். இதுபோல முன்கூட்டியே ஊருக்குக் கிளம்புவோருக்கு வசதியாக பல்வேறு ஊர்களிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கூட்டம்:
சென்னையைப் பொறுத்தவரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் நேற்று மாலை முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்தனர். சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், நள்ளிரவைத் தாண்டியும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

முன்பதிவின்றி இயக்கப்படும் பேருந்துகள் கால தாமதமாக வந்ததால் பயணிகள் அவதியடைந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த சூழலில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளுக்குக் காத்திருந்த மக்கள் சற்று நேரம் ஆடல்பாடல் நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டுக் கிளம்பினர். அதேநேரம் பல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்து நிலையத்திலும் சற்று நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்:
அதேபோல பேருந்துகள், கார்கள் என ஒரே நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் குவிந்ததால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக ஊரப்பக்காகம், கிளாம்பாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில், பரணூர் சுங்கச்சாவடி பகுதிகளில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், போக்குவரத்து நெரிசலை குறைத்து, வாகனங்களை அனுப்பும் பணிகளில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications