வந்தாச்சு ரூ.1000.. பெண்கள் குஷி! பொங்கல் பண்டிகையையொட்டி இன்றே வரவு வைக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூபாய் 1,000 பெண்களின் வங்கிக் கணக்கில் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது. பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கும் பணி இன்றே தொடங்கியுள்ளது.
தமிழக அரசு, பெண்கள் முன்னேற்றத்துக்காக கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் வாயிலாக மாதந்தோறும் ரூபாய் 1000 வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்த ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை ஒட்டி, இந்த ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, முழு கரும்பு மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு உள்ளது. இந்த பொங்கல் தொகுப்பில் ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. இன்று ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், மழை வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட நிவாரணம் வழங்கியதால் நிதி நெருக்கடி இருப்பதால் ரொக்கப் பணம் வழங்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி தேதி, குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த ஆண்டு 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், 19 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன்பாக 11, 12 ஆம் தேதிகள் சனி, ஞாயிறு என்பதால் வங்கிகள் விடுமுறை.
எனவே, இன்றும், நாளையும், மகளிர் உரிமைத்தொகைக்கான ரூபாய் 1000, அனைத்து பெண்களின் அக்கவுண்ட்களுக்கும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்றே, மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசாக ரொக்கப் பணம் வழங்கப்படாத நிலையில், உரிமைத்தொகை ரூபாய் 1000 முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ எஸ்.காந்திராஜன், தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன்பெறுகின்றனர், பல்வேறு இடங்களில் ஏழை மக்கள் மனு அளித்தும் அனுமதியளிக்கப்படவில்லை என்ற விவரங்களை தெரிவித்தனர். மனு அளித்து தகுதியானவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துப் பேசுகையில், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1 கோடியே 63 லட்சத்து 57 ஆயிரத்து 195 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் 70 சதவீதம் அதாவது 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 198 விண்ணப்பங்கள் முதல் கட்டமாக ஏற்கப்பட்டன. கடந்த 2023-ம் ஆண்டு செப்.15ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
முதல் முறை விண்ணப்பித்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி 1 கோடியே 14 லட்சத்து 65,525 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது, திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் எவரும் விடுபடாமல் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு நாங்கள் ஆய்வுக்கு செல்லும்போது, உரிமைத்தொகை வேண்டி மகளிர் விண்ணப்பம் அளிக்கின்றனர். அதுபற்றி, விவரங்களை சேகரித்து, முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். முதல்வரின் அறிவுரைகளை பெற்று இதுவரை பயன்பெறாத மகளிருக்கு திட்டத்தின் பயன் கிடைப்பதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும்.
கடந்த முறை விண்ணப்பிக்க இயலாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கவும், திட்டத்தின் தகுதிகளை பூர்த்தி செய்யும் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications