பொங்கல் வைக்க நல்ல நேரம் எது தெரியுமா? நாளை இந்த நேரத்தில் பொங்கலோ பொங்கல் சொல்லுங்கள்
சென்னை: பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் வைப்பதற்கான உகந்த நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். அது போல் மாட்டு பொங்கலுக்கு முன்னோர்களை எந்த நேரத்தில் வழிபடலாம் என்பதையும் பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கல், மகா சங்கராந்தி, லோஹ்ரி, மஹா சாஜி, பௌஷ், கிச்செரி, சுகி, சக்ராத் அல்லது கிச்சடி என பல பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவை பொருத்தமட்டில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படைக்கும் வழக்கம் இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையில் பொங்கல் சாதம் வைத்து, சர்க்கரை பொங்கல், எல்லா காய்கறிகளும் போட்டு ஒரு குழம்பு, வெந்தய கீரை கடையல் என வைத்து பூசணி இலையில் அல்லது வாழையிலையில் வைத்து சூரிய பகவானுக்கு படைப்பது வழக்கம். அந்த வகையில் நாளை பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் வாரியாரின் மாணவி தேச மங்கையர்க்கரசி கூறியிருப்பதாவது: பொங்கல் என்ற பண்டிகை அனைவராலும் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் போகி, பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என கொண்டாடப்படுகிறது.
போகி பண்டிகை என்றால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என நம் மனதில் பதிந்துவிட்டதால் சுற்றுச்சூழலை பற்றி கவலையேபடாமல் எல்லாவற்றையும் எடுத்து எரித்து வருகிறோம். இதனால் வாகன ஓட்டிகள் எந்த அளவுக்கு அவதிப்படுகிறார்கள் என்பது வெளியே பயணித்தால் மட்டுமே தெரியும்.
ஒவ்வொரு ஆண்டு பிறப்பின் போது நம் மனதில் உள்ள தேவையில்லாத விஷயங்களை வெளியே எடுத்து போட்டுவிட்டு, புதிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இன்று சுற்றுச்சூழல் மாசடையும் அளவுக்கு போகி பண்டிகை தவறாக பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
போகி பண்டிகையில் வீட்டுத் தெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபட வேண்டும். ஒரு இலையில் வெள்ளை சாதத்தை வைத்து அதன் மேல் 3 வாழைப்பழத் துண்டுகளையும், 3 அச்சு வெல்லத்தையும் வைக்க வேண்டும்.
கலசம் வைக்கும் பழக்கம் இருந்தால் ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, வேப்பிலை வைத்து இந்த ஆண்டு முழுவதும் இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கள் வீட்டில் பரிபூரணமாக நிறைந்திருந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். இதை பொதுவாக மாலை 6 மணிக்கு மேல் செய்வார்கள்.
பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன என்பதை பார்க்கலாம். நீங்கள் சூரிய பொங்கலாக வைப்பதாக இருந்தால் காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வைத்துவிடலாம். சூரிய உதயத்தின் போது அந்த பொங்கலை நைவேத்யம் செய்துவிடலாம்.
அந்த நேரத்தில் வைப்பது கஷ்டம் என்றால் காலை 6 மணி முதல் 8.50 மணிக்குள் பொங்கல் வைத்து படையல் போட்டுவிடலாம். இன்னொரு நேரம் 10.35 மணி முதல் 12 மணிக்குள்ளாகவும் பொங்கல் வைத்து படைக்கலாம். ஒரு ஆண்டு பிறக்கும் போது அது நமக்கு நல்ல ஆண்டாக அமையத்தான் இந்த பொங்கல் வைக்கிறோம்.
பொங்கல் நன்றாக பொங்கினால் இந்த ஆண்டு நமக்கு சிறப்பான ஆண்டாகும் என்பது இறைவனே ஆசிர்வதித்தது போல்! மாடு உழவர்களுக்காக உதவியதால் அதற்கு நன்றி தெரிவிக்கும் ஒரு நாள் என நினைக்காமல் இந்த மாட்டு பொங்கல் அன்று நமக்கும் மாடுகளுக்கும் நிறைய தொடர்புள்ளது.
குழந்தையாக இருந்த போது தாய்ப்பாலை குடித்து வளர்ந்தது போல் பசுவின் பாலை நம்பி நாம் வாழ்ந்து வருவதால் அந்த மாடுகளும் நமக்கு ஒரு தாய் மாதிரிதான். இதற்கு நன்றி தெரிவிக்கும் நாளாகவும் முன்னோர்களை படையலிட்டு வழிபடக் கூடிய நாளாகவும் இந்த மாட்டுப் பொங்கல் நமக்கு விளங்குகிறது.
முன்னோர்களுக்கு வேட்டி,புடவை, வைத்து படையலிட்டு படைப்பதற்கான நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 15ஆம் தேதி காலை 9.05 மணி முதல் 10.20 மணிக்குள்ளும், காலை 11 மணி முதல் 11.50 மணிக்குள்ளும், மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை படையலிட்டு வழிபடலாம். இவ்வாறு மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications