பொன்மகன் சேமிப்பு திட்டம்: ஆண் குழந்தைகளுக்கான அருமையான பாலிசி! கனவை நனைவாக்கும் பொன் மகன் வரி சலுகை
சென்னை: தமிழகத்தில் ஆண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காகவும், அவர்களின் உயர்கல்வி தேவைகளை பூர்த்தி செய்யவும் அஞ்சல் துறையால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்பான சிறு சேமிப்புத் திட்டமே பொன்மகன் சேமிப்புத் திட்டமாகும். இது PPF எனப்படும் பொது வைப்பு நிதி அடிப்படையில் செயல்படுவதால், பாதுகாப்பான முதலீட்டுடன் சேர்த்து அரசு வழங்கும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தையும், வரி விலக்குச் சலுகைகளையும் முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்...!!
உங்கள் மகனின் எதிர்காலத்தை உறுதி செய்யும் அஞ்சலகச் சேமிப்பு
தமிழகத்தில் ஆண் குழந்தைகளின் எதிர்கால நலனை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் மகத்தான திட்டம் "பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம்" ஆகும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்
பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஆண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காகச் செப்டம்பர் 2015-ல் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் சேருவதற்குப் பத்து வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது சட்டப்பூர்வக் காப்பாளர்கள் அஞ்சலகத்தில் கணக்கைத் தொடங்கலாம்.
பொன்மகன் சேமிப்பு திட்டம்
ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.
நீங்கள் மொத்தமாகவோ அல்லது மாதந்தோறும் சிறு தொகையாகவோ பணத்தை செலுத்தலாம். நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். ஏனென்றால், பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாதவர்கள் கூடச் சிறு சேமிப்பு மூலம் தங்கள் மகனின் எதிர்காலத்திற்காகப் பெரும் நிதியைத் திரட்ட முடியும்.
இது ஒரு பொது வைப்பு நிதி சார்ந்த திட்டம் என்பதால், இதற்கான வட்டி விகிதங்கள் மத்திய அரசால் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுகின்றன.
இருந்தாலும், இது மற்ற சேமிப்புகளை விடச் சிறந்த வட்டியையே வழங்கி வருகிறது. இப்போது இத்திட்டத்திற்கு 7 சதவீதத்திற்கும் குறையாமல் வட்டி வழங்கப்படுகிறது.
பொன் மகன் அஞ்சலக சேமிப்பு
இந்த திட்டத்தின் சிறப்பம்சமாக வரி சலுகையைக் குறிப்பிடலாம். வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ், நீங்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். மேலும், முதிர்வின் போது கிடைக்கும் மொத்தத் தொகைக்கும் வட்டிக்கும் வரி கிடையாது..
அதாவது, நீங்கள் முதலீடு செய்யும் போது வரிச் சலுகை பெறுவது மட்டுமல்லாமல், வட்டியுடன் சேர்த்துத் திரும்பப் பெறும் போதும் எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை. ஆண் குழந்தைகளின் உயர்கல்வி, வெளிநாட்டுப் படிப்பு அல்லது அவர்களின் தொழில் தொடக்கத்திற்கான மூலதனம் எனப் பல்வேறு தேவைகளுக்கு இந்தச் சேமிப்பு பேருதவியாக இருக்கும். இது நடுத்தர வர்க்கப் பெற்றோர்களுக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக அமைகிறது.
வட்டி விகிதம், வரி சலுகை
திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள் ஆகும்... உதாரணத்துக்கு ஒரு கணக்கீட்டின்படி, இத்திட்டத்தில் மாதம் 1,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகளுக்கு செலுத்தினால், நீங்கள் மொத்தமாக 1,80,000 ரூபாயை செலுத்தியிருப்பீர்கள். இதற்கு வட்டியாக மட்டும் தோராயமாக 1,35,500 ரூபாய் கிடைக்கும். முதிர்வு காலத்தின் முடிவில் உங்கள் மகனின் கையில் சுமார் 3,15,500 ரூபாய் நிதி இருக்கும். இது குழந்தைகளின் உயர்கல்வித் தேவைகளுக்குப் பேருதவியாக இருக்கும்.
கணக்கைத் தொடங்கிய 7வது ஆண்டிலிருந்து, அவசர தேவைகளுக்காகச் சேமிப்புத் தொகையில் பாதியை (50%) எடுத்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகும் உங்கள் சேமிப்பைத் தொடர விரும்பினால், 5 ஆண்டு தொகுப்புகளாக கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம்.
அரசு சார்ந்த திட்டம் என்பதால் இதில் முதலீட்டிற்கு 100 சதவீதம் பாதுகாப்பு உண்டு. எனவே, உங்கள் வீட்டில் ஆண் குழந்தைகள் இருந்தால், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக இன்றே அருகில் உள்ள அஞ்சலகத்தில் பொன்மகன் சேமிப்புத் திட்டக் கணக்கைத் தொடங்குவது சிறந்தது.












Click it and Unblock the Notifications