"சார் குற்றவாளினு சொல்லிட்டாங்க"! சென்னையிலிருந்து வந்த போன்! சீனியர் அமைச்சர்களிடம் பேசாத பொன்முடி?
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் குற்றவாளி என தீர்ப்பு வந்ததுமே பொன்முடி சக அமைச்சர்களிடம் பேசுவதை நிறுத்திவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நேற்று முன் தினம் வெளியாக இருந்தது. "சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்யும். அதனால் உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்" என பொன்முடியிடம் வழக்கறிஞர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர்.

இதனால் அவரும் விழுப்புரம், திருக்கோவிலூரில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் அவர் அங்கிருந்து பேராசிரியர் க.அன்பழகனின் பிறந்த நாள் விழாவுக்காக விழுப்புரத்தில் உள்ள திமுக அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது முதல்வருடன் ஒரு நிகழ்ச்சியில் பொன்முடி கலந்து கொண்ட போது அவருக்கு சென்னையிலிருந்து வழக்கறிஞர்கள் போன் செய்து உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதி செய்யப்பட்டது என கூறினர். இதனால் பொன்முடி கோபமடைந்துள்ளார். பிறகு அந்த நிகழ்ச்சிக்கு சென்ற அவர் நிறைய பேசாமல் சுருக்கமாக பேசிவிட்டு அமர்ந்தாராம்.
இதையடுத்து பொன்முடிக்கு போன் மேல் போன் வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் தண்டனை விவரங்களை அளிக்கும் போது நேரிலோ அல்லது காணொலியிலோ ஆஜராக வேண்டும் என தெரிவித்தனராம். இதையடுத்து அவர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார்.
இந்த நிலையில் பொன்முடி குற்றவாளி என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் அவருக்கு தைரியம் சொல்ல சக அமைச்சர்கள் தொடர்பு கொண்டனர். ஆனால் யாருடைய போனையும் பொன்முடி அட்டன் செய்யவில்லையாம். இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் போன் செய்துள்ளார்.

அப்போது மட்டும் பொன்முடி எடுத்தாராம். அவர் ஆறுதல் சொல்லி தைரியம் சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து நேற்றெல்லாம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் வழக்கறிஞர்களுடன் பொன்முடி ஆலோசனை நடத்தினாராம். அப்போது தனது ஆதரவாளர்களிடம் என்னை வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர் சிக்க வைத்துள்ளார்கள் என வேதனையுடன் தெரிவித்தாராம்.
வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது, தீர்ப்பில் நீதிபதி வைத்த பாயிண்ட்களை வைத்து வழக்கறிஞரான பொன்முடிக்கு கலக்கம் ஏற்பட்டதாம். இதை கவனித்த மனைவி விசாலாட்சி, நாம் நாளை கோர்ட்டுக்கு போவோம். அங்கு என்ன தண்டனை விதிக்கப்படுகிறது என்பதை வைத்து மேல்முறையீடு செய்வது குறித்து ஜாமீனுக்கு வழி வகை செய்யலாம் என மனைவி தைரியம் சொன்னதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து டெல்லியிலிருந்து வந்த எம்பி கௌதம சிகாமணியும் தந்தைக்கு தைரியம் ஊட்டினாராம். இன்று பொன்முடி கவலையடைந்தது போல் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications