பொன்முடி வழக்கு.. திமுகவுக்கு அடுத்த சறுக்கல்! வட மாவட்டங்களில் சரிந்த பிரதிநிதித்துவம்.. அதிருதே!
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய அமைச்சர் பதவி பறிபோயுள்ளது. இதன் மூலம் வட மாவட்டங்களில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் வாய்ப்புள்ளதால், வட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு மேலெழுந்திருக்கிறது.
கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி, தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார். இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் பொன்முடி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஏற்கெனவே வட மாவட்டங்களில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக இருக்கிறது. இந்நிலையில், பொன்முடியின் பதவி இழப்பு காரணமாக இந்த பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.
அதாவது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்டங்களில், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களிலிருந்து யாரும் அமைச்சரவையில் இடம்பிடிக்கவில்லை. விழுப்புரத்தில் செஞ்சி மஸ்தான், பொன்முடி என இரண்டு அமைச்சர்கள் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை ஒன்றாக குறைந்திருக்கிறது.
பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததால், தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம், உயர்கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த இரண்டு துறைகளையும் சேர்த்து கவனிப்பது என்பது சவாலான பணி. எனவே விரைவில் வேறு ஒருவர் வசம் உயர்கல்வித்துறை ஒப்படைக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். வட மாவட்டங்களிலிருந்து அமைச்சர்கள் பெரிய அளவில் யாரும் இல்லாததால் இந்த மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ ஒவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications